RSS

சில புலம்பல்கள்.

21 Jul

சமீபமாக மனம் இலக்கிய வாசிப்பை அதிகம் நாடுவதால் மற்ற விஷயங்ளில் கவனம் செலுத்தவது மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறது.இரவு 1.30 மணிவரை நாவலோ,சிறுகதையோ படிப்பதால் காலை 8 மணி குறைந்து எழ முடியவில்லை;பின் அலுவலகத்திற்கு கிளம்பும் அவசரத்தில் ஹிந்து தலையங்கத்தை,கார்ட்டூனை (சுரேந்திராவின் வெறித்தனமான ரசிகன் நான்;கேசவ் போடும் கார்டுனில் மனம் லயிக்கவில்லை)சரி வர வாசிக்க முடிவதில்லை.இது பெரும் குற்றவுணர்வைத் தருகிறது.பேருந்தில் அலுவலகத்திற்கு செல்லும் சமயங்களிலும் நாவலைத் தொடர்வதில் இருக்கும் கவனம் நாட்டுநடப்புகளை அறிந்து கொள்ள வருவதில்லை.
அடுத்த‌து- சினிமா: குறுந்தகடில் ஒரு நல்ல உலக சினிமா பார்த்து மாதக்கணகாயிற்று.Rashomon,Citizen Kane போன்ற படங்களை பல நாட்களாய் பார்க்க விரும்பியும் ஏனோ முடியவில்லை.இலக்கியத்தைவிட்டு சினிமாவைப் பிடித்துக் கொண்டால் இலக்கியம் பரதேசம் போய்விடும் and Vice-Versa.இது போக குடும்ப பொறுப்பகள் வேறு.(அப்படி என்னத்த தான் 24 மணி நேரம் படிப்பீங்களோ ? சரி அதையாவது உருப்படியா செய்றீங்களான்னு பாத்தா அதுவும் இல்லை, சூர்யா கேக்குற ஒரு கேள்விக்கு உங்களால பதில் சொல்லத் தெரியுதா ?) பொதுவாகவே நான் ஒரு Slow Readerதான்.உட்கார்ந்த மூச்சோடு ஒரு நாவலை முழுதும் படிக்க முடியாது;30 பக்கங்கள் படித்தால் பெரிய விஷய‌ம்.குறைந்தபட்சம் 10 நாள் எடுத்துக் கொள்வேன் ஒரு நாவலை படித்து முடிக்க.இதனாலேயே சினிமா போன்ற மற்ற‌ விஷயங்கள் தடை படுகின்றன.நிற்க.

****

கேணி சந்திப்பில் நாஞ்சில் நாடன், வார்த்தைகளின் வலிமையை,அதன் கூரிய வீச்சு,புதுப் புதுப் சொற்களை கையாளுதல்,மிக முக்கியமாக, பொருத்தமான வார்த்தைகளை எழுத்தில் பயன்படுத்தம் விதம் போன்றவற்றைப் பற்றி பேசியது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

http://thittivaasal.blogspot.in/2010/03/blog-post.html

Excerpts:

இன்றைக்கு இருக்கும் கவிஞர்கள் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுவதில்லை. தமக்குத் தெரிந்த 1000 சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு எழுதுகிறார்கள். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் முன் அட்டையை கிழித்துவிட்டால் யாருடைய கவிதைத் தொகுப்பு என்றே தெரியாது. அந்த அளவிற்கு சலிப்பாக இருக்கிறது. வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் மெனக்கெட வேண்டும். கட்டுரை, புனைகதை போலவே அகராதி வாசிப்பும் சுவாரஸ்யமான ஒன்று. இளம் படைப்பாளிகள் நேரம் எடுத்து அதை செய்ய வேண்டும்.

“டென்னிஸ் விளையாட்டில் ஒரு பெண் பின் பாக்கெட்டில் இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பந்தை எடுத்து மேலே தூக்கிப் போட்டு பார்க்கிறாள். பந்து சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். அடுத்த பந்தை எடுக்கிறாள் அதுவும் சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். வேறு பந்தைக் கொடுக்கிறார்கள்…அதை சரி பார்த்து சர்வீஸ் போடுகிறாள். ஒரு சர்வீஸ்-கே இப்படி என்றால் 100 வருடம், 1000 வருடம் வாழப்போகிற படைப்பிற்கு சரியான சொல்லைத் தேட வேண்டாமா?” என்று கூறியதும் பலத்த கரவொலி எழுந்தது. எனக்குப் பக்கத்தில் கவிஞர் உழவனும் கைதட்டிக் கொண்டிருந்தார்.

நாஞ்சில் சொல்வது எத்தனை உண்மை – நாம் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைதான் திரும்ப திரும்ப சலித்துக் கொண்டிருக்கிறோம்.தப்பித்தவறி ஒரு புது வார்த்தையை சந்திக்க நேர்ந்தால் மிரண்டுதான் போகிறோம்.சிவாஜி படத்தில் பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்,புன்னைகையோ மெளவல் மெளவல் என்ற பாடலில் ஆம்பல்,மெளவல் போன்ற வார்த்தைகளுக்கு வைரமுத்து வந்து நமக்கு வகுப்பெடுக்க வேண்டியதாய் இருக்கிற‌து மகா கேவலம்!! சுஜாதா சொல்வது போல் எழுத்தாளனுக்கு எப்போதும் புதுப் புதுப் சொற்களின் மேல் பிரேமை வேண்டும்..திரும்ப திரும்ப நாம் சிலாகிக்கும் வார்த்தைகள் – “மனதைப் பிசைந்தது”,” உயிரை உருக்கியது” போன்ற எண்ணற்ற கிளிஷேக்களை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு ப்ளாக்கிலும் இரண்டு மூன்று பதிவுகளை படித்தாலே போதும் நிறைய கிளிஷே வார்த்தைகள் அகப்படும்.

இதே கருத்தைத்தான் தியோடர் பாஸ்கரும் காலச்சுவடு நேர்காணலில் அழகாக சொல்லியிருக்கிறார்.

உலக சினிமா குறித்துத் தமிழில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகம்கூட வரவில்லை. இது குறித்து நீங்கள் எந்த அளவு யோசித்திருக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவைக் குறித்துப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லையே. ஒரு துறை சார்ந்து ஆழமான பரிசீலனைகள் நிகழ வேண்டுமானால் அதற்கான வளமான சொல்லாடல்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும். இலக்கியம் குறித்து நடந்துவரும் விவாதங்களிலிருந்து உருப்பெற்றிருக்கும் சொற்கள்தாம் அது குறித்த ஆழமான விவாதங்களுக்குப் பாதை அமைத்துக்கொடுத்திருக்கின்றன. தமிழ் சினிமா குறித்துப் பேசுபவர்கள் கதை, பாட்டு என்று மிக மேலோட்டமான விஷயங்களுடன் தேங்கிவிடுகிறார்கள். தமிழ் சினிமா குறித்து விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்னும் மனோபாவம் அறிவுத் துறையினரிடம் இருக்கிறது. ஆழமான விவாதங்களை உருவாக்காமல் செறிவான சொல்லாடல்களை உருவாக்க முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயம்.

தமிழ் சினிமா பற்றிப் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. முக்கியமான ஆங்கில நூல் ஒன்று சிட்னியில் இலங்கைத் தமிழர் வேலாயுதத்தைத் தொகுப்பாசிரியராகக்கொண்டு உருவாகிக்கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற ரௌட்லெட்ஜ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இதில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ராஜன் குறை போன்ற ஆய்வாளர்கள் இடம்பெறுகிறார்கள். வாஷிங்டனில் சினிமா போதிக்கும் லலிதா கோபாலன் இந்திய சினிமா பற்றி 24 Frames என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். 24 இயல்கள் கொண்ட இந்த நூலில் மூன்று இயல்கள் தமிழ் சினிமா பற்றியன. எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு இயல் எழுதியுள்ளார். தமிழ் சினிமா பற்றிய நூல்கள் தமிழில் குறைவுதான். அறந்தை நாராயணன், புலவர் கோவிந்தன் இவர்களுடைய நூல்கள் முக்கியமானவை. இங்கு தமிழில் ஒரு சொல்லாடலே உருவாகவில்லை. அதற்கு அடிப்படையான கலைச் சொற்களும் உருவாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, develop (the film) என்ற சொல்லுக்கு என்ன தமிழ்ச் சொல்? அரசு விளம்பரங்களில் ‘பதனிடுதல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தோலைத்தான் பதனிடுவார்கள். பழைய பத்திரிகைகளில், நிழற்படம் பற்றிய கட்டுரைகளில் ‘உருத்துலக்கல்’ என்கிறார்கள். பொருத்தமான சொல்.

தமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. ஆகவே நாம் துறைச் சொற்களை உருவாக்க முடியும். ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சினையை, பிரெஞ்சு சொற்களை அப்படியே பயன்படுத்திச் சமாளித்தார்கள், montage, mise en scene, film noir, cinema verite என. ஏன் பிரெஞ்சு மொழி? சினிமா பிறந்த பிரான்ஸில் தொடக்கத்திலேயே சினிமா ஒரு கலை வடிவமாகப் படித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது குறித்த துறைச் சொற்கள் உருவாயின. சீரிய சொல்லாடல் மௌன சகாப்தத்திலேயே உருவானது. வரலாற்றில் இடம்பெற்ற Abel Gance இயக்கிய Napoleon (1927) போன்ற படங்கள் மௌனப் படங்கள்தாம்.

தமிழில் சினிமா பற்றிய கலைச் சொற்கள், சினிமா சார்ந்த கருதுகோள்களைக் குறிக்கும் சொற்றொடர்கள் இல்லாதது இதைப் பற்றிய சீரிய சொல்லாடல் உருவாகாததற்கும் நூல்கள் வெளிவராததற்கும் முக்கியக் காரணம். சில பத்திரிகைகளில் சினிமா பற்றிய கட்டுரைகள் இப்போது வர ஆரம்பித்துள்ளது நல்ல அறிகுறி. ஆயினும் துறைச் சொற்கள் புழக்கத்தில் வராதது பெரும் குறை. துறைச் சொற்கள் இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தோடு சிலம்பமாடுவது போன்றது.

தமிழ் சினிமா பற்றிப் பல M.Phil., Ph.D. ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ‘திரைப்பாடல்களில் ஜாதி’, ‘தமிழ் சினிமாவில் பெண்ணியம்’ என. இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது. இந்த ஆய்வுகளும் தமிழ்த் துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பாட்டுப் புத்தகத்தையும் வசனத்தையும் வைத்துச் செய்யப்படும் ஆய்வுகள் இவை.

http://www.kalachuvadu.com/issue-89/interview.asp

****

நாஞ்சில் மற்றும் தியோடர் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தால் க்ரியாவின் தமிழ் அகராதி வாங்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.2008’இல் புதிதாக திருத்தப்பட்டு,30 லட்சம் வார்த்தைகளோடு பதிப்பித்திருக்கிறார்கள்.விலை கொஞ்சம் அதிகம்தான்.எனக்குத் தெரிந்து க்ரியா புத்தகங்கள், எப்போதுமே உயிர்மை,காலச்சுவடு கிழக்கைவிட விலை அதிகம்தான்.ஆனால் காலத்திற்கும் பயனுள்ளது.வெறும் ஒரு இரண்டு மணி நேர ரிசெப்ஷன் கூத்துக்கு 3000 மதிப்புள்ள ஷெர்வாணியோ கோட்டையோ வாங்கும் நாம் ஒரு நல்ல தமிழ் அகராதி வாங்குவதில் கவனம் செலுத்துவதில்லை என்பது வருத்தம் கலந்த வெட்கக்கேடு.

க்ரியா தமிழ் அகராதி :

http://www.udumalai.com/?prd=&page=products&id=8044

தூங்கும்முன் கடைசியாக ஒரு வார்த்தை :

யதேச்சையாக இன்று எத்தனை பேர் என் பளாக்கை பார்த்திருக்கிறார்கள் என்று பார்த்து போது ஒரு சுவாரஸ்யமான தேடல் அகப்பட்டது.

ஜட்டி போடாத நடிகை என்று கூகுளில் தேடி,ஒரு அன்பர் என் தளத்திற்குள் வந்திருக்கிறார்.

என்ன கொடுமை Google இது!!!

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: