RSS

Category Archives: அனுபவம்

போங்க‌டா நீங்க‌ளும் உங்க‌ ஐடியும்

அன்றாட வாழ்க்கை ஏன் இத்தனை சலிப்பும்,அயர்ச்சியுமாய் இருக்கிறது ? எவ‌னோ ஒருவ‌ன் ப‌ட‌த்தின் ஆர‌ம்ப‌ காட்சிதான் நினைவிற்கு வ‌ருகிற‌து.வார‌த்தின் ஐந்து நாட்க‌ளும் ம‌னைவி க‌ட்டி த‌ரும் உண‌வை Tupperware’இல் அடைத்து;நானும் கச்சேரிக்கு போகிறேன் என்ற பேரில் பிற ஆடுகளோடு மந்தையில் கலந்து; பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று ஒரு பேருந்தைப் பிடித்து; எழவெடுத்த பெங்களூர் Traffic’இல் ஒன்னரை மணி கழித்து அலுவலகம் சென்று; அன்றைய இத்துப் போன-புடுங்கிய-ஆணியே-மறுபடி புடுங்ககூடிய பணியை தலையெழுத்தென்று ஏதோ ஆரம்பித்து;அரை மணி கழித்து என்ன கிழித்துவிட்டேன் என்று காபிக்கு கேன்டின் சென்று; திரும்பவும் மனமில்லாமல் லிஃப்டைப் பிடித்து என் த‌ள‌த்திற்கு வ‌ந்து ஆணி புடுங்க‌ ஒரு ம‌ணியில் ம‌திய‌ உண‌வு வேளை வ‌ர; திரும்ப‌ ஓடு Tupperware’த் தூக்கிக்கொண்டு.மொத்த‌ ஆடுக‌ளின் இரைச்ச‌லில் உண‌வை க‌வ‌ள‌ம் க‌வ‌ளமாக‌ உள்ளே த‌ள்ளி முடிந்த‌ கையோடு ஒரு க‌ட‌லை மிட்டாயை அல்ப்பாசைக்கு சாப்பிட்டுவிட்டு ம‌றுப‌டி……

பின் தேனீர் நேர‌த்திற்கு காத்திருந்து அதை குடித்து, சில‌ நேர‌ம் தேமேயென்று வேலை செய்து, EOD புடுங்கிய‌தை TL’இட‌ம் சொல்லி, வெறுத்துப் போய் ப‌ரோலில் வெளி வந்த‌ கைதி போல் முக‌த்தில் ப‌டும் பெங்க‌ளூர் குளிர் காற்றை ர‌சிக்க‌ ம‌ன‌மில்லாமல், ட்ராஃபிக் எப்ப‌டி இருக்குமோ என்ற‌ பீதியில் பேருந்தைப் பிடித்து 1 ம‌ணியில் வ‌ந்தால் சந்தோஷத்தில் திருச்செந்தூர் முருக‌னிற்கு ந‌ன்றி சொல்லி பொடி ந‌டையாய் வ‌ரும் போது கைபேசியில் ம‌னைவி இட்லி அரிசி இர‌ண்டு கிலோ வாங்கிட்டு வாங்க‌ என்ப‌தை நினைவு ப‌டுத்த‌, க‌டைக்குச் சென்றால், அரிசி குடோனில் இருக்குங்க‌ 1 நிமிஷ‌ம் இருங்க‌ எடுத்துட்டு வ‌ரேன் என்று சொல்லி க‌டைக்கார‌ரும் ந‌ம் பொறுமையை சோதித்து,அந்த 5 நிமிஷ சலிப்பைப் போக்க‌ க‌ண்ணாடி பாட்டில்களில் பள்ளிப் பிள்ளைகளுக்காக வைத்திருக்கும் க‌ட‌லை ப‌ர்பியையோ தேன் மிட்டாயையோ வாயில் ஒதிக்கு இட்லி அரிசியைப் பெற்று கொண்டு, After Hours ப‌ட‌த்தின் இறுதி காட்சியில் த‌ன் அலுவ‌ல‌க‌ம் முன் தொமென்று ஒரு டெம்போவிலிருந்து விழும் ஹீரோவைப் போல் வீட்டில் விழும் போது… அப்பா என்று 3.5 வ‌ய‌து ம‌க‌ன் சிரிக்க, வாடா என் ஷெல்வமே!!! என்று மனோகரா கண்ணாம்பா போல் அவனை கட்டியணைத்து,அவனிடம் மொத்த‌ நாள் வெறுமை,எரிச்ச‌ல்,இய‌லாம‌யை க‌ரைத்து – போங்க‌டா நீங்க‌ளும் உங்க‌ ஐடியும் என்று கத்த‌ வேண்டும் போல் இருக்கிற‌து.

 
Leave a comment

Posted by on November 12, 2014 in அனுபவம்

 

பிஸ்கட் கனவுகள்!!!

பள்ளியில் படிக்கும் அரை டவுசர் காலங்களில், ஒவ்வொரு மாதமும், முதல் வாரத்தை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் எங்கள் வீட்டு ஓனர் வருகைக்காக! என் அப்பாவிடம் வாடகைப் பணம் வாங்க வருவார்.ஆனால், எனக்கு, என்ன வாடகை, ஒவ்வொரு மாதமும் என் அப்பா சரியாக வாடகை கொடுத்துவிடுவாரா என்பதை பற்றியெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது,தெரிந்துகொள்ள விருப்பமுமில்லை.என் கவனம் எல்லாம் வீட்டுக்காரர் ஒவ்வொரு மாதமும் எனக்காக கொண்டுவரும் Milk Bikis.

இதை வெறும் சம்பிராதய சடங்காக இருந்தால் ஒரிரு மாதங்களில் அவர் நிறுத்தியிருக்கலாம்.ஆனால் எனக்குத் தெரிந்து எல்லா மாதத்திலும் தவறாமல் வாங்கி வந்திருக்கிறார்.இன்று நினைத்தால் நெகிழ்வாக இருக்கிறது, ஒரு வீட்டுக்காரர், ஒரு பொடியனை மதித்து மாதா மாதம் பிஸ்கட் வாங்கி வர வேண்டும் என்ன கட்டாயம் ?

80’களில், Milk Bikis, சிறுவர்களுக்கு ஒரளவுக்கு எளிதாக‌ கிடைக்ககூடிய பண்டம்.பெரும்பாலான விருந்தினர்கள் குழந்தைகளுக்கு அது அல்லது Marie வாங்கி கொண்டு வருவார். மாரி பிஸ்கட்டை கண்ணில்கூட காணக்கூடாதென நினைப்பேன்.அதன் மேல் அப்படி ஒரு வெறுப்பு. Milk Bikis பரவாயில்லை ரகம்.Good Day Or Cream Biscuits – Luxury.

வெகு அரிதாகத்தான் யாராவது ஒரு நண்பர் True Elaichi Cream/Good Day வாங்கி வருவார்.அன்றைய தினத்தில் பம்பர் குலுக்கலில் Prize அடித்தவன்கூட அப்படி ஒரு தெனாவட்டில்,உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்திருக்க மாட்டான்.

என்ன எழவுக்கு இந்த சுயபுராணம் என்றால், இன்று சூப்பர் மார்கெட்டில் எத்தனை வகை பிஸ்கட்டுகள்,குக்கீகள், நொறுக்குதீனிகள். ஒவ்வொரு முறை பில் போடும் போது எனக்கு முன்னால் இருக்கும் நபர்களின் கூடைகளைப் பார்பேன். அரிசி,உப்பு,புளி வகையாராக்களை விட நொறுக்குதீனிகளே அதிகமிருக்கும்.எல்லாம் டஜன் டஜனாய் வாங்கி போவார்கள்.இதுக சாப்பாடே இது தான் போலும் என்று பல நேரம் வியந்திருக்கிறேன்.

Perk/5 Star
Oreo/Cookies/
Fanta/Mirinda/Coke
Lays/Bingo
Kinder Joy/

எனக்குத் தெரிந்து எந்தவொரு மத்தியதர சிறுவனும் இன்று நொறுக்குதீனிக்காக பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.வருடத்தின் எல்லா நாட்களும் வீட்டின் அடுக்களையில், குளிர் சாதன் பெட்டியில் ஒரு சிறிய பெட்டிகடையே இருக்கும்.படிக்கும் போதும்,டிவி பார்க்கும் போது பசிக்கிறதோ இல்லையோ,பிடிக்கிறதோ இல்லையோ தின்னு தீர்க்க வேண்டும் என்பது நீதி.தின்று தீர்க்கிறார்கள்.

மேலும், வாரம் ஒரு புதிய பிஸ்கட் சந்தைக்கு வருகிறது ஆனால் சுவையில் ஒரு புண்ணாக்கும் இல்லை.வெறும் Wrapper’களை கவர்ச்சியாக போட்டு,உள்ளே பிஸ்கட்டுகளை இன்னும் ஒர் சிறிய தாள்களில் போட்டு ஒரு Status சரக்காக விற்கிறார்கள்.அதை சந்தைபடுத்த Katrina Kaif ஒரு வாயில் Cream ஒழுக‌ உதட்டை நக்குகிறார்.பிஸ்கட் விளம்பரமா காண்டம் விளம்பரமா என்று சந்தேகமாய் இருக்கிறது.பிஸ்கட் எப்படி திங்கறதுன்னு கூட இந்த விளம்பரகார பயகதான் சொல்லிக் கேட்கணும் போல.

திடிரென்று பிரபஞ்ச வெடிப்பு போல் ஒரு Big Explosion!!! எல்லாமே அளவுக்கதிமாய் போய்விட்டது.திகட்ட திகட்ட நொறுக்குதீனிகள்,திகட்ட திகட்ட தொலைக்காட்சி சானல்கள்,வருஷம் 365 நாளும் கிரிக்கெட் விளையாடுறான்,ஊர்ல உள்ள எல்லா தியேட்டர்லயும் ஒரே படம், பிடிக்குதோ இல்லையோ அதத்தான் நாமும் பாத்து தொலயுணும், தெருவுக்கு பத்து ஹோட்டல்,மூணு மாசத்தக்கு ஒரு புது மொபைல் மாடல்,ஒரு ஐபோன் மாடல் எல்லாமே abundant. இதுவா வாழ்க்கை ? சத்தியமா எனக்கு தெரியல!!

அந்த 5 ரூபாய் க்கு Milk Bikis ஒவ்வொரு மாதம் காத்திருக்கும் நாட்களில் இருந்த ஏக்கம்,சந்தோஷம் இன்று இல்லை.எனக்கென்னமோ இதுதான் இரண்டாம் உலகம் போல் தெரிகிறது.

 

Tags:

பெங்களூரில் இன்று மழைக்காலம்.

ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தது – பருவ மழைதான் – இன்று பெய்தது.வருடா வருடம் ஜுனிலேயே தவறாமல் வருவது இந்த வருடம் ஜூலைவரை பெங்களூர் மக்களை காக்க வைத்து படாத பாடு படுத்திற்று.மழைக்கு வந்த வாழ்வு!!! இன்று இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்த மழை இப்போது வரை தூறிக் கொண்டேதான் இருக்கிறது.சன்னலை திறந்து வைத்து இதை தட்டச்சு செய்யும் போது அறை எங்கும் அலாதியான குளுமை!! அது என்ன மாயம் என்று புரியவில்லை,ம‌ழை நேரங்களில் பெண்கள் அநியாயத்திற்கு அழகாய்த் தெரிகிறார்கள்!

மனம் மிகுந்த பரவசத்திலிருந்தது.இந்த உற்சாகத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்கும்விதமாக‌ கார்த்திக்கை கைபேசியில் அழைத்து ஐந்து நிமிடங்கள் அவர் கழுத்தை அறுத்தேன்.அதற்கு மேல் நீட்டித்தால் என் நம்பரை delete செய்து விடுவாரோ என எண்ணி முடித்துக்கொண்டேன்.

ஒரு நல்ல ஃபிலடர் காபியை பருகிக்கொண்டு மழையை ரசிக்கும் மனநிலையில் இருந்தேன்.ஆனால் இந்த பாழாய்ப் போன அலுவலக மெஷினில் Cappucino எழவைத் தவிர வேறில்லை என்பதால் அதை குடித்துக்கொண்டே மழையை சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.வீட்டிலிருந்தால் ஒரு நல்ல நாவலை கையில் எடுத்து சன்னல் பக்கம் அமர்ந்திருக்கலாம்.மழையை பார்த்து கொண்டு படிப்பது சுகானுபவம்!!! ம‌ழை என்றதும் வைரமுத்துவின் கவிதைதான் நினைவிற்கு வருகிறது.
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ….

Charanam : 1

சிறு பூவினிலே விழுந்தால்
ஒரு தேன்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய Shower இது
அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது
இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

Charanam :2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்!!

 

Tags:

இது வேறு வெள்ளிக்கிழமை.

வழக்கமான வெள்ளிக்கிழமையின் காலை சந்தோஷங்கள் இன்று இல்லை. நாலைந்து நாட்களாக பையனுக்கு காய்ச்சல்;கடும் இருமல்;பயங்கர அழுகை.அரை இட்லியைக் கூட சாப்பிட மறுத்துவிட்டது குழந்தை.இதன்பின்தான் உச்சகட்ட நிகழ்வு இருக்கிறது.மருந்து புகட்டுவது.

ஒரு ப்ளாஸ்டிக் குப்பியில் சிரப்பை நிரப்பும் போதே குழந்தை கவனமாகிவிடும்.பயம்,பதட்டம் பெரும் அழுகையாக வெடிக்கும்.இதிலிருந்து மீட்டு,விளையாட்டு காட்டி,ஒரு வழியாக அவனை மடியில் படுக்க வைத்து அடுத்தகட்ட போர்க்கால நடவடிக்கைக்கு தயாராக  வேண்டும்.இருகால்களையும்,கைகளையும் நான் கெட்டியாக பிடித்துக் கொள்ள,குழந்தை திமிறினாலும் அதற்கு விடாப்பிடியாக மருந்து புகட்டும் சம்பவம் நடைபெறும்.பிறகு ஒரு 5 நிமிடத்தில் குழந்தை தன் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

இன்று இப்படி நடந்திருந்தால் பரவாயில்லை.ஆனால் குடித்த மருந்தை அத்தனையும் கக்கிவிட்டது.குழந்தைக்கு சிறு பாதிப்பு என்றாலே மனைவி எரிமலையாய் வெடித்து விடுவாள்(குழந்தையிடமல்ல என்னிடம்) இந்த சூழலில் என்னாகுமோ எனக்கு உள்ளுர பதட்டம் பயம்.எதிர்பார்த்தது நடந்தது.

குழந்தை இவ்வளவு முடியாம இருக்கறப்பகூட ஒரு லீவு எடுக்கறீங்ளா ? என்று ஆரம்பித்து பட்டாசாய் பொரிந்து தள்ளிவிட்டாள்.

மனைவி பேச்சு ஒன்வே Return வரக்கூடாது என்பதற்கேற்ப்ப நான் வாய் திறக்கவில்லை.மனஉளைச்சல்,எரிச்சல்.(வெளியில் காட்டமுடியாது என்பது வேறு விஷயம்) இந்த பரபரப்பில் அலுவலகத்திற்கு செல்ல தாமதமாகிவிட்டது.தற்போது படித்துக்கொண்டிருந்த ஜே.ஜே.சில குறிப்புகள் ஒரு மூலையில் நாற்காலியின் மேல்-என்னை எடுத்துட்டு போ என்று அழைப்பது போலிருந்தது..எடுக்கலாமா என்று ஒரு சிறு சபலம்.ஆனால் முடியவில்லை.மனைவி தயாராக இருந்தார் என்னை வெளியில் தள்ளி கதவை சாத்த.அப்போது போய் ஜே.ஜே சில குறிப்புகளை எடுத்துத்தா என்றால் கதவிற்கு பதிலாக நான் சாத்தப்படுவேன்.எதற்கு வம்பென்று நொந்துபோய் காலாற நடந்து பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன்.பாதி தூரம் வந்தபின்தான் தெரிந்தது கையில் காசில்லை என்று.Courier வேறு அனுப்ப வேண்டும்.என் அதிர்ஷ்டம்  ATM ஏதும் அருகில் இல்லை.திரும்பவும் வீட்டிற்கா என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.இதற்குள் மணி 10.30.அலுவலகம் 11 மணிக்கு.வீட்டிற்குச் சென்று பணம் வாங்கி Courier’ஐ அனுப்பி முடித்த போது மணி 10.50.

திடிரென நடுவீதியில் தனியாக விடப்பட்டதுபோல் ஒரு வெறுமை உணர்வு (ஒவ்வொரு ஞாயிறு இரவு இந்த உணர்வு தவறாமல் வரும்) கோபம்,ஏமாற்றம்,எரிச்சல்.யாரிடமாவது கொட்டித் தீர்த்தால் தேவலை என்று தோன்றியது.ஆனால் காலை பதினோரு மணிக்கு கோடிஹள்ளியின் குறுகிய வீதியில் என் புலம்பலைக் கேட்க யார் வருவார்கள் ?

எதையாவது படிக்க வேண்டும் போல் இருந்தது.ஒரு பெட்டிக் கடையில் வேறு வழியில்லாமல் விகடனை வாங்கினேன்.பெட்டிக்கடை புண்ணியவான் விகடனையும்,என் விகடனையும் தந்தார்.என் விகடனை புரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கும்போதே பின் அட்டை வந்துவிட்டது.இந்த நோட்டீஸை எதுக்கு தனியா தந்து தொலையுறாங்க நாலு பக்கத்தை விகடனோடு சேத்து போட வேண்டியதானே என்று எரிச்சப்பட்டு விகடனைப் புரட்டினேன்.குமுதத்தை படிப்பது போலவே இருந்தது ஆம்,துளிகூட‌ சறக்கில்லை.வட்டியும் முதலும் ஆரம்ப வரிகள்கூட சுவாரஸ்யமாக இல்லை.என்ன கொடுமைடா இது என்று மனம் போன போக்கில் பக்கங்களை புரட்டினேன்.அரை மணி நேரம் மேல் படிக்கப் பிடிக்கவில்லை.சுருட்டி கையில் வைத்துக் கொண்டேன்.வெளியில் பார்த்த போது ட்ராஃபிக் அதிகம் இல்லை என்று தெரிந்தது.வழக்கத்திற்கு மாறாக நாற்பது நிமிடங்களில் அலுவலகம் வந்து சேர்ந்தேன் வெறுமையோடு.

 
Leave a comment

Posted by on June 29, 2012 in அனுபவம்