RSS

Category Archives: இலக்கியம்

ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்

சமீபத்தில், நான் மிகவும் ரசித்து படித்த நாவல் “ஒரு கடலோர கிராமத்தின் கதை”. நாவலை முடித்தபின் முதலில் தோன்றியது எப்படி இந்த நாவல் சினிமாக்காரர்களிடமிருந்து தப்பியது ? நாவலை படமாக்கியிருந்தால், கடலோர பின்னணி கொண்ட‌, அசலான இஸ்லாமிய கதாபாத்திரங்களின் வார்ப்போடு நல்லதொரு திரைப்படம் கிடைத்திருக்கும். நமக்கு அத்தகையொரு அதிர்ஷ்டம் இன்று வரை வாய்க்கவில்லை; கிடைப்பதெல்லாம் அரைவேக்காட்டு – கடற்கரை வட்டாரத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பாஷை பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் – பட‌ங்கள். (கடல்,சிட்டிசன்,மரியான்)

படித்த எல்லா நாவல்களிலும் இப்படி தோன்றுவதில்லை, சில நாவல்கள்தான் சினிமாவிற்கு தோதாகப் படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது எளிமையான கதை,புதிதான கதைக் களன்,சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அவர்களுக்குள்ளே நடக்கும் உரையாடல்கள். கிளாசிக் நாவல்களுக்கேகுரிய தீவிர Monologue/Stream-of Consciousness writing – ஆதவன் சிறுகதைகளில் வருவது போல மனம் ஒரு கதாபாத்திரமாகி ஓயாது பேசிக்கொண்டயிருக்கும்போது படமாக்குவது வெகு சிக்கலாகிறது, அப்படியே படமாக்கினாலும், நாவலின் ஆன்மா சினிமாவில் இல்லாமல் போகிறது. இதனால்தான் வெகு சில‌ கிளாசிக் நாவல்களே படமாக்கப்படுகின்றன அதில் சொற்பமே வெற்றியும் பெறுகின்றன.

meeran

கதை, முதல் உலகப் போர் காலகட்டத்தில், இஸ்லாமிய கிராமமான தேங்காய்பட்டணத்தில் நடக்கிறது. நாவலின் பிரதான கரு: தேங்காய்பட்டணத்தில் வாழும் பண்ணையாரான,வடக்கு வீட்டு முதலாளி எனும் அகமதுவின் வீழ்ச்சியை படிப்படியாக விவரிக்கிறது. ஆனால் Subtext’ஆக கல்வியறிவுயில்லாத அந்த மக்களில் விரவியிருக்கும் அதீத மூட நம்பிக்கைகள், போலி மதகுருமார்களின் மீது கண்மூடித்தனமான பற்று,பெண்ணடிமைத்தன போக்கு என பலதைப் மெல்லிய நாஞ்சில் நக்கலோடு பேசுகிறது.

இரண்டு விஷயங்கள் என்னை பெரிதும் கவர்ந்தது ஒன்று நாவல் முழுதும் வரும் உருது-மலையாளம் கலந்த வட்டார வழக்கு.இன்னொன்று இயல்பான‌ கதாபாத்திரங்கள் – அவர்களின் இஸ்லாமிய பேர்கள்.

சுயலாபத்திற்காக, ஆங்கில கல்விமுறையை வரவிடாமல் தடுக்கும், மத ஆசிரியர் அசனார் லெப்பை; நிலபிரபுத்துவ வரைமுறைகளுக்குள் அடங்க விரும்பாத, முதலாளியை கிராமத்திலேயே தனியாளாக எதிர்க்கும் மஹ்முது; கருமியான பெட்டிக்கடை உசேன்பாய்; உச்சபட்சமாக, அந்த ஊரில் ஒரு ஜின்னை(சாத்தான்)ஒட்ட வந்திருப்பதாக சொல்லி, முதலாளி விட்டில் சுகமாய் வாழும் போலி மதகுருவான தங்கள் என, பிரமாதமான கதாபாத்திரங்கள் வாசிப்பை அலாதியாக்குகிறது.

 
Leave a comment

Posted by on January 15, 2015 in இலக்கியம், Novel

 

ஜே.கே – சில கதாபாத்திரங்கள்.

படிக்கவேண்டிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் இருக்க, எதற்கு ஏற்கனவே வாசித்த சிறுகதையோ/நாவலையோ மறுவாசிப்பு செய்யவேண்டும் என்று பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.ஆனால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களுக்கு இந்த சுயகட்டுப்பாடு பொருந்துவதில்லை (ஜெயகாந்தன்,ஆதவன்) இவர்களின் சில கதைக‌ள் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.

எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால், நேற்று ஜெயகாந்தனின் “பாவம் பக்தர்தானே” என்ற சிறுகதை அவ்வப்போது மனதில் நிழலாடிக்கொண்டிருந்தது.மூன்று வருடங்களுக்கு முன் பாதித்த கதை காரணமேயின்றி ஏன் திடிரென்று என் நினைவிற்கு வந்தது என்று ஆச்சர்யமாகயிருந்தது. நேற்றிரவே படிக்க வேண்டுமென நினைத்திருந்தேன் ஆனால் பயங்கர அசதி காரணமாக இரவில் சீக்கிரம் தூங்கிப் போனேன்.

பிறகு, இன்று காலை பேருந்தில் அலுவலகம் செல்லும் வேளையில் படித்து முடித்தேன்.தாள முடியாத துக்கத்தின் போது தொண்டைக் குழி அடைத்துக் கொண்டு எந்த நேரம் அழுதுவிடும் மனநிலையில் இருக்கும் ஒரு உணர்வு வந்தது.க‌தையில் வந்த ஊமைக் கிழவி கதாபாத்திரம் ஆணியாய் மனதில் இறங்கியது.அப்போது பேருந்து HAL சிக்னலில் நின்று கொண்டிருந்தது.இனி 30 நிமிடங்கள் பிடிக்கும் அலுவலகம் நிறுத்தம் வர.வழக்கமாக அலுவலகம் வரும் வரை ஏதாவது படித்துக் கொண்டு வருவேன் ஆனால் இன்று வேறெதயும் படிக்கப் பிடிக்கவில்லை.அந்தக் கிழவி, கோவிலுள்ள பாலகிருஷ்ணனுக்கு மிகுந்த பரிவோடு சோறு ஊட்டிவிடும் காட்சி மீண்டும் மீண்டும் வந்து போனது.இந்தக் கதை முதல் தடவை படித்த போது எத்தகைய தாக்கம் இருந்ததோ அதே உணர்வு மூன்று வருடங்கள் கழித்து படித்த போதும் இருந்தது.காரணம் ஜே.கேயின் வலுவான பாத்திரப் படைப்பு. எப்படி ஜே.கே. மட்டும் இவ்வளவு அழுத்தமான கதாபாத்திர‌ங்களை உருவாக்குகிறார் என்று எத்தனையோ முறை வியந்திருக்கிறேன்.உளியைக் கொண்டு வடிக்கும் சிலையின் நேர்த்தி ஜே.கேயின் கதாபாத்திரங்கள்.

எந்த எழுத்தாளரின் கதாபாத்திரங்களும் அந்த படைப்புகளை மீறி நம் மனதில் தங்கியதில்லை,மாறாக ஜே.கே கதைகளில் வரும் ஒரு பிச்சைக்காரன்கூட நம்மில் ஆழ்ந்த அதிர்வலைகளை ஏற்படுத்துகிறான் (குருபீடம்) பல வருடங்கள் கழித்தும் அந்த கதாபாத்திரங்கள் நம் ஆழ் மனதின் மூலையில் ஒளிந்து கொண்டு அவ்வப்போது வெளிவந்து நமக்கே வியப்பூட்டுகின்றன‌.இந்த கதாபாத்திரங்களின் ஒரு அடிப்படை பொதுவான அம்சம் – ஒரு குழந்தைக்குரிய வெகுளித்தனம் – ஈரம் – பரிவு – அன்பு.

  • ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் – ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு,அக்காமா.
  • கைவிலங்கு – மாணிக்கம்,ராகவையர்,அவரின் மனைவி என Humanism தெரிக்கும் பாத்திரங்கள்தான் எவ்வளவு அழகு.

அவ்வளவு ஏன், பொம்மை என்றொரு ஜே.கேயின் சிறுகதை உண்டு.(எப்போதோ படித்தது) ஒரு மூன்றோ அல்லது நான்கோ வயதுடைய‌ குழந்தை மட்டுமே அந்தக் கதையில் வரும் கதாபாத்திரம்.அப்படி ஒரு அழுத்தமான குழந்தை கதாபாத்திரம் தமிழ் சிறுகதைகளிலோ நாவல்களிலோ உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

 

தூசி தட்டியவை.

முதலில், இந்த வருடம் பதிவே எழுதக்கூடாதென நினைத்திருந்தேன்.ஆனால் உங்களின் போதாத நேரம்,அந்த யோசனை வந்த அடுத்த இரண்டு மாதங்களில் 8 பதிவுகள் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆனால் அதன் பிறகு ஒரு பெரிய இடைவெளி.(உங்களின் நல்ல நேரம்) கடந்த இரு மாதங்களில்,அவ்வப்போது பதிவெழுத ஆர்வம் ஏற்பட்டாலும் அதை சரிவர செயல்படுத்த முடியவில்லை.முதல் காரணம் வீட்டில் இணைய வசதி இல்லை.அடுத்து, வார இறுதியில் மேற்கொண்ட சொந்த ஊர் பயணங்கள்.இப்போது விஷயத்திற்கு வருவோம்.எழுதாத நாட்களில் அவ்வப்போது Draft’ல்  சேமித்து வைத்த சிலவற்றை கொஞ்ச கொஞ்சமாக வெளியிட திட்டம்.அவைதான் இந்த பதிவு:

*********

நல்ல கவிதையை ரசிக்க ஒரு பக்குவப்பட்ட மனநிலையும் பொறுமையும் தேவை.எப்போதும் கடைசி ரயிலைப் பிடிக்கும் மனநிலையில் இருக்கும் என்னைப் போன்ற அவசரகுடுக்கைகளுக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது.என்னுடைய கவிதை ரசனை வைரமுத்து,வாலி எழுதிய சினிமா பாடல்களோடு முடிந்துவிடும்.வார பத்திரிகைகளில் வரும் பல கவிதைகளை படித்தாலும் ஒன்றிரண்டுதான் புரியும்.புரியாதவற்றை  பிரயத்தனப்பட்டு புரிந்துகொள்ள எனக்கு விருப்பமுமில்லை பொறுமையுமில்லை.அந்த சமயங்களில்,நம் பேட்டையே சிறுகதை நாவல் என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்வதுண்டு.இருந்தாலும்,அபூர்வமாக சில கவிதை கவர்வதுண்டு.அப்படி ஒன்று இந்த மாத உயிர்மை இதழில் வந்தது.எழுதியவர் தேவதச்சன்.

நீ எனக்கு
எவ்வளவு முக்கியம் தெரியுமா
பாம்புக்கு

எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம்!

*********

வெற்றிமாறனுக்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.ஆடுகளம் தமிழில் ஒரு முக்கிய முயற்சி((எண்பதுகளில் நாயகன் வந்ததைப் போல).ஒரு காட்சியை எப்படி அணுக வேண்டும் என்பதை ஆடுகளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்;அந்தளவுக்கு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் அசாத்திய உழைப்பு தெரிந்தது.

இன்னும் சரியாகச் சொன்னால்:

சினிமாவில் திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் இயக்குனர் ஒரு காட்சியை எடுக்கும் விதம் அல்லது அணுகும் விதம்.எழுத்தில் சாதாரணமாய் தெரியும் காட்சிகள் கூட இயக்குனரின் அழகான Screen Presence’ஆல் பிரமாண்டமாக மாறுவதுண்டு.அந்த வகையில் ஆடுகளத்தோடு ஒப்பிட்டால், இந்த வருடத்தில் வேறு ஒரு படமும் அதன் பக்கத்தில் கூட நிற்கத் தகுதியில்லை.

பி.கு: ஒத்த சொல்லாலே நடனமைப்புகெல்லாம் விருது கிடைத்ததில் எனக்கு உடன்பாடில்லை,ஆனால் விருதில் ஒளிப்பதிவை கண்டுகொள்ளாதது வருத்தமே.