RSS

Category Archives: சிறுகதை

ஜே.கே – சில கதாபாத்திரங்கள்.

படிக்கவேண்டிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் இருக்க, எதற்கு ஏற்கனவே வாசித்த சிறுகதையோ/நாவலையோ மறுவாசிப்பு செய்யவேண்டும் என்று பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.ஆனால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களுக்கு இந்த சுயகட்டுப்பாடு பொருந்துவதில்லை (ஜெயகாந்தன்,ஆதவன்) இவர்களின் சில கதைக‌ள் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.

எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால், நேற்று ஜெயகாந்தனின் “பாவம் பக்தர்தானே” என்ற சிறுகதை அவ்வப்போது மனதில் நிழலாடிக்கொண்டிருந்தது.மூன்று வருடங்களுக்கு முன் பாதித்த கதை காரணமேயின்றி ஏன் திடிரென்று என் நினைவிற்கு வந்தது என்று ஆச்சர்யமாகயிருந்தது. நேற்றிரவே படிக்க வேண்டுமென நினைத்திருந்தேன் ஆனால் பயங்கர அசதி காரணமாக இரவில் சீக்கிரம் தூங்கிப் போனேன்.

பிறகு, இன்று காலை பேருந்தில் அலுவலகம் செல்லும் வேளையில் படித்து முடித்தேன்.தாள முடியாத துக்கத்தின் போது தொண்டைக் குழி அடைத்துக் கொண்டு எந்த நேரம் அழுதுவிடும் மனநிலையில் இருக்கும் ஒரு உணர்வு வந்தது.க‌தையில் வந்த ஊமைக் கிழவி கதாபாத்திரம் ஆணியாய் மனதில் இறங்கியது.அப்போது பேருந்து HAL சிக்னலில் நின்று கொண்டிருந்தது.இனி 30 நிமிடங்கள் பிடிக்கும் அலுவலகம் நிறுத்தம் வர.வழக்கமாக அலுவலகம் வரும் வரை ஏதாவது படித்துக் கொண்டு வருவேன் ஆனால் இன்று வேறெதயும் படிக்கப் பிடிக்கவில்லை.அந்தக் கிழவி, கோவிலுள்ள பாலகிருஷ்ணனுக்கு மிகுந்த பரிவோடு சோறு ஊட்டிவிடும் காட்சி மீண்டும் மீண்டும் வந்து போனது.இந்தக் கதை முதல் தடவை படித்த போது எத்தகைய தாக்கம் இருந்ததோ அதே உணர்வு மூன்று வருடங்கள் கழித்து படித்த போதும் இருந்தது.காரணம் ஜே.கேயின் வலுவான பாத்திரப் படைப்பு. எப்படி ஜே.கே. மட்டும் இவ்வளவு அழுத்தமான கதாபாத்திர‌ங்களை உருவாக்குகிறார் என்று எத்தனையோ முறை வியந்திருக்கிறேன்.உளியைக் கொண்டு வடிக்கும் சிலையின் நேர்த்தி ஜே.கேயின் கதாபாத்திரங்கள்.

எந்த எழுத்தாளரின் கதாபாத்திரங்களும் அந்த படைப்புகளை மீறி நம் மனதில் தங்கியதில்லை,மாறாக ஜே.கே கதைகளில் வரும் ஒரு பிச்சைக்காரன்கூட நம்மில் ஆழ்ந்த அதிர்வலைகளை ஏற்படுத்துகிறான் (குருபீடம்) பல வருடங்கள் கழித்தும் அந்த கதாபாத்திரங்கள் நம் ஆழ் மனதின் மூலையில் ஒளிந்து கொண்டு அவ்வப்போது வெளிவந்து நமக்கே வியப்பூட்டுகின்றன‌.இந்த கதாபாத்திரங்களின் ஒரு அடிப்படை பொதுவான அம்சம் – ஒரு குழந்தைக்குரிய வெகுளித்தனம் – ஈரம் – பரிவு – அன்பு.

  • ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் – ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு,அக்காமா.
  • கைவிலங்கு – மாணிக்கம்,ராகவையர்,அவரின் மனைவி என Humanism தெரிக்கும் பாத்திரங்கள்தான் எவ்வளவு அழகு.

அவ்வளவு ஏன், பொம்மை என்றொரு ஜே.கேயின் சிறுகதை உண்டு.(எப்போதோ படித்தது) ஒரு மூன்றோ அல்லது நான்கோ வயதுடைய‌ குழந்தை மட்டுமே அந்தக் கதையில் வரும் கதாபாத்திரம்.அப்படி ஒரு அழுத்தமான குழந்தை கதாபாத்திரம் தமிழ் சிறுகதைகளிலோ நாவல்களிலோ உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.