RSS

Category Archives: தோனி

அவசரகுடுக்கைகள்.

நீதானே என் பொன் வசந்தம் படத்தின் ஒரு பாடல் வந்து சில மணி நேரங்கள் கூட ஆனபாடில்லை,அதற்குள் சமூக வலைதளங்களில் அதீத பாராட்டுக்கள் அல்லது அதீத தூற்றல்கள்.இதுதான் இன்று நம்மின் பிரச்சனையே.அதீத அவசரம்.படம் பார்க்கும்போதே ட்விட்டுவது,இடைவேளையின் போதே ப்ளாக்கில் விமர்சனம் என்ற பேரில் கண்டதை கிறுக்கித் தொலைவது,Promoவிற்காக பாடலின் சில வரிகள் வந்தால் கூட அதைப் பற்றி நாள் முழுக்க வாதிடுவது என்று ஒன்றிற்கு உதவாத வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம்.

எந்தவொரு படத்தையோ பாடலையோ பற்றி விமர்சிப்பது,எதிர்மறை கருத்துக்களை தெரிவிப்பது பிரச்சனையில்லை ஆனால் எந்தளவிற்கு இவர்கள் படத்தை உள்வாங்கிக் கொண்டு இதைச் செய்கிறார்கள் என்பது தான் பிரச்சனையே.ஏதோ போட்டியில் கலந்து கொண்ட‌ ஆவேசத்துடன் பெரும்பாலனோர் அவசர அவசரமாக படங்களை விமர்சிக்கிறார்கள்.இதே போல,இரண்டு மூன்று தடவை ஒரு பாடலைக் கேட்டுவிட்டு சுப்புடு ரேஞ்ஜிற்கு அந்தப் பாடலை கூறு போடுகிறார்கள்.எதற்கு இத்தனை அவசரம் ? இவர்களின் அரை குறை விமர்சனங்களை யார் கேட்டார்கள் ?

இப்படித்தான் வழக்கு எண் வந்த பொழுதில் அந்தப் படத்தைப் பற்றி வானளாவிய பாராட்டுதலினாலும் காதல் ஏற்படுத்திய தாக்கத்தினாலும் சனியன் போய்த் தொலைகிறது என்று PVRஇல் 300 ரூபாய் தண்டம் அழுதேன்.ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும் சிலர் இந்தப் படத்தை இரானிய படம் என்று ஏன் சிலாகித்தார்கள் என்று பெரும் குழப்பமாகவே இருக்கிறது.உலகப் படம்,தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி மலர்,இரானியப் படம் போன்ற வாசகங்களை அரசு தடை செய்ய வேண்டும்.

 ***

தோனியில் “விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய்….”ஏன் அதிகம் கண்டு கொள்ளாமலே போனது என்று வருத்தமாகயிருந்தது. படம் பார்க்கும் வரை இந்தப் பாடலின் தாக்கம் அதிகமில்லை.ஆனால் இப்போது மீண்டும் கேட்கும் போது Prelude/Interlude’இல் வரும் மனதை உருக்கும் வயலின்கள்,பாடலில் காட்டிய நடுத்தர வர்க்கத்தின் பணச்சிக்கல்,பிரகாஷ்ராஜின் முக பாவனைக்கள்,ஷ்ரேயா கோசலின் எளிமையான குரல் – மிகவும் பிடித்துப்போனது.நந்தலாலாவிற்குப் பிறகு ராஜாவின் இசையில் ஒரு நல்ல மெலடி.வழக்கம் போல படம் பணால் ஆகியதால் ராஜாவின் சமீபத்தில் வந்த சில நல்ல பாடல்களில் இதுவும் சேர்ந்து அடக்கமாகிவிட்டது.

ஆனால் இந்த கதி மற்ற இசையமைப்பாளர்களுக்கு நேராது.காரணம்,மரண கொடுமையான பாடலாக இருந்தாலும்கூட காலை முதல் இரவு வரை தொலைக்காட்சி,எஃப் எம்’இல் போட்டு நம் தாலி அறுப்பார்கள்.பிடிக்கிறதோ இல்லையோ நாம் கேட்டுத்தான் தொலய வேண்டும்.ஒரு கட்டத்தில் நம்மை அறியாமல் நாமே அந்தப் பாடலை முணு முணுக்கத் தொடங்கிவிடுவொம்.இப்படித்தான் இன்று 90% பாடல்கள் ஹிட் ஆகின்றன.

எவன்டி உன்ன பெத்தான் பெத்தான்,கிளிமஞ்சாரோ,என்னமோ ஏதோ,முன் அந்திச் சாரலில் போன்ற கொடுமைகள் இசை சானல்கள்,எஃப் எம் இல்லையெனில் சீந்துவார் எவரும் இருக்க மாட்டார்கள்.

.