RSS

Category Archives: K Balachandar

Aside

தமிழ் சினிமா இசைக்கும் தற்போது கடுமையான Recession போல.கேட்கிற பல பாடல்கள் கடைந்தெடுத்த மகா குப்பை.கடந்த சில‌ வருடங்களில், மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தாலே, ஒரு நாலைந்து தான் தேறும் போல‌.மீதி இருக்கும் ஏனைய குப்பைகள், மியுசிக் சானல்கள்,பண்பலை வாயிலாக – குழந்தைக்கு வலுக்கட்டாயமாக மருந்து புகட்டுவது போல், திரும்ப திரும்ப நம் காதுகளில் செலுத்தப்பட்டு  விடாப்படியாக Hit ஆக்கப்படுகிறது.

இதைவிட கவலை தரும் விஷயம் பாடல் வரிகளில் உள்ள தரம்- Lack of Lyrical Clarity/Quality.பாடல்களின் தரம் தாழ்ந்து போனதற்கு முக்கிய காரணம்- தடி எடுத்தவன் எல்லா தண்டல்காரன் என்பது போல், நடிகர்கள்,இயக்குனர்கள் என்று பலரும் சகட்டுமேனிக்கு பாட்டு எழுதுவது.இதனால், பாடல் வரிகள் ட்யுனோடு சேர்ந்து பயணிக்காமல் தனியாய்த் துருத்திக்கொண்டு தெரிகிறது.இன்னும் குறிப்பாகச் சொன்னால், வார்த்தைகள் ட்யுனிற்கு அடங்க மறுக்கின்றன.ஹிந்தி பாடல்களை தமிழில் டப் செய்து கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.இதற்கு நல்ல உதாரணம் :

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல.

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..

மேற்கண்ட இடங்களில் பாடல் வரிகள் ட்யுனோடு அடங்க சிரமப்பட்டு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

விளைவு : பாடல் வசன-நடையாக விடுகிறது

இன்னொரு பிரச்ச‌னை அர்த்தமில்லா Dummy வரிகள்.இயக்குனர்களும் இதை பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. பாடல் வரிகள் வெறும் ட்யுனை நெறப்பும்  Fillerக‌ள் என நினைத்துக் கொண்டார்களா ? மனம் போன போக்கில் வார்த்தைகளை போட்டு நெறப்புகிறார்கள்.ஆரம்ப வரிகள் Catchyயாக இருக்க வேண்டும்,பாடலினுள் எந்த புண்ணாக்கும் இருந்துவிட்டு போகட்டும்.

எவன்டி உன்னப் பெத்தான் பாட்டின் சரணத்தில் வரும் வரிகள் போதும், இன்றைய‌ தமிழ் சினிமா இசையின் மகத்துவத்தை புரிந்து கொள்ள…

Un Paste Brush’um Naanthan
Un Šhøwer Gel’um Naanthan
Un Maanam Kaakura Maelaada Naanthan
Un Lip Gløss’um Naanthan
Un Èye Liner Naanthan
Un Azhaga Køøtura Makeup’ae Naanthan
Un Teddybear Naanthan
Un Bed & Pilløw Naanthan
Un Veetøda Night Watchman Naanthan
Un Nagamum Šathaiyum Naanthan

அது என்ன, உன் Un Paste Brush’um நாந்தான் / Un Šhøwer Gel’um நாந்தான்? இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்?

யார் கேட்டார்கள் இவர்கள் பாட்டு எழுதித் தொலைக்க  வேண்டுமென்று ?

*******

நம் இயக்குனர்களுக்கு, பாடல்களின் முக்கியத்துவம்/தேவை பற்றி ஒரு தெளிவில்லையா ? அல்லது மெனக்கெட விருப்பமில்லையா ? இவர்கள் அனைவரும் பாலசந்தர் படங்களைத் திரும்ப ஒரு முறை பார்க்க வேண்டும்.தமிழ் சினிமாவில், பாலசந்தரைப் போல வேறு எவரும் பாடல்களை உருப்படியாக கையாண்டதில்லை. சிந்து பைரவியில் – பாடறியேன் என்ற பாட்டைத் நீக்கி விட்டால் போதும், அந்த படமே அர்த்தமிழந்துவிடும். ஆனால் இன்று படத்தின் சில காட்சிகளை நீக்கினாலே எந்த பாதிப்பும் இல்லை என்ற ரீதியில் படங்கள் வருகிறது.

காட்சிகளில்/வசனங்களில் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை பாடல்களால்/பின்னணி இசையால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

இதற்கு  நல்ல உதாரணங்கள் சொல்ல வேண்டுமென்றால் :

 • பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே…
 • நானொரு சிந்து காவடிச் சிந்து…
 • கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
 • சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ்…
 • நீ ஆண்டவனா தாய் தந்தைதான்…
 • பூங்காத்து திரும்புமா எம்பாட்ட விரும்புமா…

இந்த பாடல்களில் சொல்லியதை வசனத்தால்,காட்சியமைப்புகளால் சொல்ல முடியுமா ?

பாடல்கள் கதையை நகர்த்த,அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல‌ இயக்குனருக்கு பெரிதும் உதவுகின்றன.இதை ஏன் இன்றைய இயக்குனர்கள் புரிந்து கொள்ளவில்லை ? பாடல்களை வெறும் Crowd-Pulling பண்டமாக பார்க்கின்றனர் ?

*******

கடந்த பத்து ஆண்டுகளில் எனக்குப் பிடித்த ஒரே பாடல் என்றால் அது:

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

என்ன வரிகள்!!! வைரமுத்து நீர் 100 ஆண்டு வாழவேண்டும் அய்யா..

தேவை அவசர சிகிச்சை – தமிழ் சினிமா இசை.

 
Leave a comment

Posted by on February 5, 2013 in Cinema, K Balachandar, Music.

 

விருது நிஜமாகிறது.

கலைமாமணி முதல் ஆஸ்கர் வரை,சாஹித்ய அகாடமி முதல் நோபல் பரிசு வரை,உலகில் எந்த ஒரு துறைக்கு வழங்கப்படும் விருதாகட்டும்,அது அநேக நேரங்களில் சரியான கலைஞனை சென்றடைவதில்லை.அதிலும், குறிப்பாக இந்தியா போன்ற பலதரப்பட்ட மொழிகள்,கலாச்சார வேறுபாடுகள் உள்ள நாட்டில், தேர்வுக் குழுவிடமிருந்து ஒரு நியாயமான விருதை எதிர்பார்ப்பது படு அபத்தம்  என்று சொல்வேன்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்,
மிக முக்கிய காரணம் தேர்வுக் குழுவில் விரவியிருக்கும் மிதமிஞ்சிய அரசியல்! இருந்தும்,சமயங்களில் (தெரிந்தோ தெரியாமலோ) அது சரியான கலைஞர்களுக்கும் போய் சேர்கிறது.

அப்படி போய்ச் சேர்ந்தவைதான்  சமீபத்திய இரண்டு  விருதுகள் :

 • பாலசந்தருக்கு Dada Saheb Phalke விருது.
 • ஆடுகளம் படத்திற்காக வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனர் விருது.

சினிமாவை வெறும் வியாபார ரீதியில் அணுகாமல்  ஆத்மார்த்தமாக நேசித்த/நேசிக்கும் ஒரு சில நல்ல இயக்குனர்களில் பாலசந்தர் மிக முக்கியமானவர். அவருக்கு இந்த விருது,(வழக்கம் போல்) தாமதமாக வந்து  அங்கீகாரம்தான் என்றாலும் புண்ணியவான்கள் இப்போதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்களே என்பதற்காகவே தேர்வுக்குழுவைப் பாராட்டலாம்.

இலக்கியநய வசனங்கள்,இயல்பு வாழ்க்கைக்கு  கொஞ்சங்கூட அருகில் வராத ஒழுக்கசீல ஹீரோக்கள்,பாவப்பட்ட ஹீரோயின்   கதாபாத்திரங்கள்,அரதப் பழசான குடும்ப கதைகள்  என்று திரும்ப திரும்ப ஒரே வட்டத்திற்குள் உழன்று வந்து கொண்டிருந்த நேரத்தில் பாலசந்தர் வரவு – அன்று  தமிழ்  சினிமாவிற்கு மிகவும் தேவைப்பட்ட ஒன்று.அதீத Melodramaவில் தத்தளித்துக் கொண்டிருந்த அன்றைய தமிழ் சினிமாவில்,அவர் படங்கள் முற்றிலும் UnconventionalSatirical.

ஹிந்தியில்கூட Shyam Benegal – Ankur,Nishant,Bhumika என்று Parallel Cinemaவிற்கு அழகான தொடக்கம் அமைத்து கொடுத்த நேரம்,தமிழில் – ஜெய்ஷங்கரின் கௌபாய் படங்கள்,சிவாஜி,எம்.ஜி.ஆரின் கடைசி கால ஈஸ்ட்-மென்-கலர் படங்கள் வந்து கொண்டிருந்தது.அந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் ஒரே மாற்று கே.பி.அவர் எடுத்துக்கொண்ட களம்-கதை-கதாபாத்திரங்கள் என அனைத்தும் புதிது.ஒட்டுமொத்த திரையுலகம் எம்.ஜி.ஆர், சிவாஜியையே நவகிரகம் போல் சுற்றி வந்த காலத்தில்கூட கே.பி தன் Script ஒன்றையே நம்பியவர்.கே.பி படங்களில் எனக்கு பிடித்தது மூன்று விஷயங்கள்

 • அவர் அமைக்கும் ஹீரோயின் கதாபாத்திரம்.

அவ்வளவு Powerful-Egoistic-Matured கதாபாத்திரத்தை வேறெந்த தமிழ் படத்திலும் பார்த்ததில்லை.சுமித்ரா(நிழல் நிஜமாகிறது),சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை,அவர்கள்),சுகாசினி (சிந்துபைரவி,மனதில் உறுதி வேண்டும்),சீதா(உன்னால் முடியும் தம்பி),சரிதா(தப்புத் தாளங்கள்) என எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் கே.பியின் Heroine-Characterisation ஏற்படுத்தும் பாதிப்பு அவரின் படத்தைவிட அதிகம்.வறுமையின் நிறம் சிகப்பு போன்ற Hero-Centric படங்களில்கூட ஸ்ரீதேவி கதாபாத்திரம் அவ்வளவு அழகான முக்கியத்துவத்தோடு இருக்கும்.

இன்னும் ஒரு நல்ல உதாரணம்:

பார்த்தாலே பரவசத்தில்,மாதவனிடம் விவாகரத்து ஏற்பட்டு சிம்ரன் வீட்டை விட்டு வெளியேறும்போது,நான் வாங்கி கொடுத்த சேலையத்தான் நீ கட்டியிருக்கே என்று மாதவன்  சொன்ன ஒரே காரணத்தால்,காருக்குள் இருந்துபடியே சேலையை கழற்றி  எறிந்து  கண்ணாடியை உயர்த்திவிட்டு செல்லும் அந்த அலட்சியம்; Typical K.B Brand.

 • ஆண்-பெண் உறவுகளை கையாளும் விதம்.

காலம் காலமாய் தமிழ் சினிமாவில் போலியாய் சித்தரித்து மக்களை ஏமாற்றி-காட்டப்பட்ட  ஏக பத்தினி விரதனான ஹீரோ;கணவனே கண் கண்ட தெய்வம் என கோட்பாடுடைய ஹீரோயின் போன்ற அபத்தமான கிளிஷேக்களான  கடாசி விட்டு,ஆண்-பெண் பேதமின்றி ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் உண்மையான உணர்வை திரையில் வெளிக்கொணர்ந்தவர்.காமத்தை கேபியைப் போல் யாரும் உண்மையாக அணுகியதில்லை.சிந்து பைரவியில், ஜே.கே.பி-சிந்துவிற்குமிடையே பூங்காவில் நடக்கும் சந்திப்பில் இருவரின் யதார்த்த நிலையும் மறந்து தங்களை இழக்கும் அந்த நிகழ்வு ஒன்று போதும் கே.பியின் அட்டகாசமான Human-Mind-Studyக்கு.

ஜே.கே.பி Characterisation சமூகத்தில் உள்ள சராசரி மனிதனின் பிரதி. என்னதான் இன்று நாம் ஒவ்வொரும் கம்ப்யுட்டர்முன் உட்கார்ந்தாலும்,Allen Solly சட்டையில் Perfume அடித்து பண்பட்டவராக சமூகத்தில் காட்டிக் கொண்டாலும், மனதின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் காமம் அப்படியேதான் இருக்கிறது.அதனிடம் பல நேரங்களில் நாம் நம்மையே இழக்கத்தான் செய்கிறோம்.2011’ல் கூட இயக்குனர்கள் சொல்லத் தயங்கிய விஷயங்களை முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னரே சொல்லும் துணிச்சல் அவருக்கு இருந்தது.அதனால்தான் அரங்கேற்றம்,அபூர்வ ராகங்கள்,அவள் ஒரு தொடர்கதை,மூன்று முடிச்சு,அவர்கள், என கே.பியின் படைப்புகள் எல்லாமே  ahead-of-its-time.கே.பி Zoologyதான் படித்தாரா இல்லை Psychology படித்தாரா என்று சந்தேகமாக இருக்கிறது.

 • சமூக அக்கறை

எந்த ஒரு இயக்குனருக்கும் நம் வாழும் சமூகத்தை பற்றிய அக்கறை கொஞ்சமாவது இருக்க வேண்டும்.எடுக்கிற படம் கேவலமாக  இருந்தால்கூட சகித்துக்கொள்ளலாம் அது மக்கள் மனதை கெடுக்காமல் இருந்தாலே உத்தமம்.ஆனால் இன்று வரும் படங்களை(ரேணிகுண்டா,பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம்,சிவா மனசுல சக்தி,களவாணி,ஆடுகளம்,பொல்லாதவன்)
பார்த்தாலே அவர்களின் சமூக அக்கறை எந்த அளவில் இருக்கிறது என்று தெரிகிறது.எதற்காக ஹீரோக்களை படு தறுதலைகளாக காட்டுகிறார்கள் என்று புரியவில்லை.முணுக்கென்றால் டாஸ்மாக் செல்கிறார்கள்.சக நண்பர்களோடு பீர் அடிப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார்கள்.பீர் அடிப்பதை இளைஞர்களின் Statusஆக எதற்கு சித்தரிக்க முற்படுகிறார்கள்? போதாதற்கு அளவு கடந்த வன்முறை-அருவாள் வெட்டு காட்சிகள். இது பள்ளி-கல்லூரி மாணவர்களின் மனதை எந்தளவு பாதிக்கும் என்ற அடிப்படை பொது அறிவுகூட இல்லை,இவர்கள் எதற்கு சினிமாவிற்கு வருகிறார்கள் ?

மேற்கண்ட எண்ணங்கள் தன்னிச்சையாக எழும் ஒவ்வொரு முறை உன்னால் முடியும் தம்பி,வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களை பார்க்கும்போது.வலிமையான கருத்துக்களை எவ்வளவு எளிதாக வசனங்களில் சொல்லியிருப்பார்.கே.பியின் சில துணை கதாபாத்திரங்களுக்காகவே அவர் படங்களை வெறித்தனமாக பல முறை பார்ப்பதுண்டு (மரம்-நடுவதை மிகவும் விரும்பும் வேலைக்கார கிழவர்(உன்னால் முடியும் தம்பி ),வாய் பேச முடியாத ஓவியன்(வறுமையின் நிறம் சிகப்பு))

கடைசியாக :
சேகர் கபூர் பல வருடங்களாக சொல்லி வருகிறார் எதிர்காலத்தில் தண்ணீர் எவ்வளவு முக்கிய பிரச்சனை ஆகப்போகிறது என்றும்,அதை வைத்து “Paani” என்ற பேரில் ஒரு படம் எடுக்க போவதாகவும்.

கே.பி, முப்பது வருடங்கள் முன்பே ஆர்ப்பாட்டமே இல்லாமல் அதைச் செய்துவிட்டார் தண்ணீர் தண்ணீர் படத்தில்.