RSS

Category Archives: Society

தொழில்நுட்ப வளர்ச்சியும் சில அதிகப்பிரசங்கிகளும்

பொதுவாக எந்தப் படம் பார்க்கும் முன் அதை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளப் பிடிக்காது.அது படத்தின் சுவாரசியத்தை குலைத்துவிடும் என்பது என் அபிப்பிராயம்.விமர்சனம் படிக்க மாட்டேன்.அந்தப் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைகூட‌ TVயில் பார்க்க மாட்டேன்.படம் பார்த்தபின்தான் எல்லாம்.

ஆனால் இன்றைய தேதியில் இந்த உப‌வாசங்களை க‌டைபிடிப்பதுக்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.சுப்ரமணியபுரம் பெங்களூரில் Release ஆகாத சமயம்.யதேச்சையாக சென்னை சென்றேன்.சுப்ரமணியபுரம் பார்க்காமல் பெங்களூர் திரும்பக்கூடாது என்று சாந்தி தியேட்டருக்கு நானும் என் நண்பனும் சென்றோம்.அந்த நேரம் பார்த்து இன்னொரு நண்பன் திருநெல்வேலியிலிருந்து செல்ஃபோனில் அழைக்க…

நான், “மாப்ள!! சுப்ரமணியபுரம் படத்துக்கு வந்துருகேம்ல,படம் முடிந்சு கூப்புடுறேன்

நண்பன், “சரிலே, நாளைக்கு Call பண்றேன்” என்று இணைப்பைத் துண்டிக்க முயல‌,அப்போதாவது நான் சும்மா இருந்து தொலைத்திருக்கலாம்.ஆனால் விதி வலியது.

நான், “நீ படம் பாத்தியா ? பட்டைய கிளப்புச்சா” என்று வலிய போய் வாங்கி கட்டிக் கொண்டேன்.

நண்பன், “என்ன படம்ல,கடசில எல்ல பயலும் செத்துருவானா,அந்த எழவ பாக்கணுமா” சரி வச்சுறேன்.

அந்த பதிலை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.என்ன செய்ய ஏது செய்ய என்று ஒன்றும் பிடிபடவில்லை.திரும்பவும் பூமி 2 நிமிஷம் முன்னால் போய் விடாதா என்று தோன்றியது.அப்படி ஒரு எமாற்றம் மனதில்.ஒரு மாதமாக அந்தப் படத்தை பார்க்கும் வெறியில் இருந்த எனக்கு,ஒரே நொடியில் அந்த பதிலால் சுக்கு நூறாய் ஆயிற்று. நொந்து போய் தியேட்டருக்குள் வேண்டா வெறுப்பாய் நுழைந்தேன்.படத்தின் உயிரே கிளைமேக்ஸ்தான்.அதையே போட்டு உடைத்ததால் ப‌டத்தை சுத்தமாக ரசிக்க முடியவில்லை.2 மணி நேரம் பேருக்கு உட்கார்ந்து விட்டு வந்தேன்.இன்று வரை அந்த எரிச்சலும்,வலியும் இருக்கிறது.

இதுபோக‌ ப‌டம் வந்த இரண்டு மணி நேரத்தில் Twitter,Orkut,Blogger என்று எல்லா Social Network Siteகளிலும் படத்தை Post-Mortem செய்ய‌ ஆரம்பித்து விடுகிறார்கள்.தொழில்நுட்ப வளார்ச்சியின் மிகப்பெரிய பாதிப்பு இது.Privacy என்பதே இல்லாமல் போய்விட்டது. ஈரம் படத்திற்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தபோதும் இப்படித்தான்.இத்தனைக்கும் ப‌டம் வெளிவந்த மறுநாள்.எனக்கு முன் இருக்கும் ஒரு ஆசாமி அவன் நண்பனுக்கு செல்ஃபோனிலேயே ப‌டத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டான்.எனக்கு உச்ச கட்ட பயம்.அதை கேட்க கூடாதென எனக்குள்ளாகவே கெளசல்யா சுப்ரபாதத்தை முனக ஆரம்பித்துவிட்டேன். நல்ல வேளை! இடைவேளை விடுவதுக்குள் அவன் வரிசை வந்துவிட்டது.இல்லையெனில் முழு படத்தை செல்ஃபோனிலேயே ஓட்டியிருப்பான்.

இந்த மாறி மனிதர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.தாங்கள் செய்யும் செயல்கள் படம் பார்க்க‌ வருபவர்களை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

இணையத்திலும் இது போன்று சில புண்ணியவான்கள் இருக்கிறார்கள்.எந்தப் படமாக இருந்தாலும் சகட்டுமேனிக்குத் தாளிக்கிறார்கள்.அதிலும் விஜய் படம் என்றால் கேட்கவே வேண்டாம்.அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து overhauling செய்துவிடுகிறார்கள்.விஜயை விமர்சிப்பதில் தனி இன்பம்,ஒரு குருர மகிழ்ச்சி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.சனியன் அதோடு தொலைந்தாலும் பரவாயில்லை.பேரிலக்கியம் படைத்தது போல ஒருத்தர் விடாமல் Email Fwd வேறு செய்து விடுகிறார்கள்.இவர்களின் வலைதளத்தின் Hit Ratioவை அதிகரிக்க இது ஒரு எளிய வழி.

கேட்டால் “விஜய் நல்ல படம் நடிச்சா நாங்க ஏன் விமர்சிக்க போறோம்” என்று Oscar Jury ரேஞ்சுக்குப் பேசுகிறார்கள். நான் இவர்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன்

“விஜய் நல்ல படம் நடிக்க மாட்டார்ன்னு நல்லாத் தெரியுது அப்புறம் ஏன் இன்னும் அவர் படங்களை இவர்கள் பார்க்கிறார்கள் ? “ அப்படி சிரமப்பட்டு காசை கிணற்றில் போல வேண்டுமா ? செய்ய மாட்டார்கள்.காரணம் இவர்கள் பொழப்பு ஓடாது.இவர்கள் ஒரு வகை.

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள்.விமர்சனத்தை பத்தி பத்தியாக எழுதி தள்ளுகிறார்கள்.படத்தின் ரீல் 12 என்றால் இவர்கள் செய்யும் விமர்சனத்தின் ரீல் அதை விட நீள‌…மாக இருக்கிறது.வயிற்றில் புளியை கரைக்கிறது.கிட்ட திட்ட தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடுகிறார்கள். நாள் முழுதும் தலை கீழாய் நின்று யோசித்தாலும் ஐந்தாறு பத்திகளை என்னால் தாண்டமுடியவில்லை.இந்த‌ இடத்தில் முக்கியமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
விமர்சனத்தில் பட‌த்தின் முக்கியமான‌ திருப்பம் மிகுந்த காட்சிகளை அல்லது கிளைமேக்சை தயவுகூர்ந்து சொல்லாதீர்கள்.இல்லை சொல்லித்தான் தீருவேன் நீ யார் கேட்க என்றால் Spoiler Alertஆவது போடுங்கள்.படம் பார்க்காதவர்கள் அதை படிக்காமல் ஆவது இருப்பார்கள்.விமர்சனத்தில் படத்தின் முக்கியமான Plus&Minusஐ சொல்லுங்கள் படத்தின் ரீலை ஓட்டாதீர்கள்.அது தியேட்டர் ஆப்ப‌ரேட்டர்கள் வேலை.

கடைசியாக‌:

படம் பார்க்க வரும் புண்ணியாத்மாகளுக்கு சில வேண்டுகோள்கள்:

  • ஃபிகரை தியேட்டருக்கு கூட்டி வந்து, படம் ஓடும்போது குசு குசு என்று பேசாமல் இருக்க‌..
  • செல்ஃபோனில் காட்டுக் கூச்சல் போடாமலிருக்க‌..
  • அவ்வப்போது திரையை மறைத்து, கும்ப‌ல் கும்பலாக தம் அடிக்க செல்லாதிருக்க‌..

தியேட்டர் ஆப்ப‌ரேட்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

  • இடைவேளை விட்டபின் லைட்டுகளை போட்டுத் தொலையுங்களேன்.அதற்குள் என்ன அவசரம் ?
  • End Creditsஐ முழுதாக போடுங்கள்.எந்த ஒரு (சிறு) கலைஞனுக்கும் அங்கீகாரம் மிகவும் முக்கியம்.அவன் விரும்புவதும் அதுவே.ஒன்றிரண்டு பேராவது அதை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.
 
2 Comments

Posted by on January 19, 2011 in Cinema, Society

 

Chennai Book Fair – 2011

சில தனிப்பட்ட காரணங்களால் ஜனவரியில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத சூழ்நிலை.போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் முழுதாக படித்து முடிக்காமல் ஷெல்ஃப்களில் தூங்குகிறது.இருந்தாலும் மனம் அமைதியற்று அலைகிறது.எப்படியாவது Book Fairக்குச் சென்றுவிட முடியாதா என்று ஏங்குகிறது.சென்னையில் இருந்த‌போது வருடந்தவறாமல் புத்தக சந்தைக்குச் சென்றாலும், கையில் காசில்லாததால் ஒரு சில புத்தகங்களோடு வர வேண்டிய நிலை.இப்போது கூரையைப் பிய்த்து கொட்ட வில்லையென்றாலும், ஏதோ முடிந்தவரையில் விரும்பும் புத்தகங்களை வாங்கமுடிகிறது என்பதே மிகப்பெரிய சந்தோஷம்.புத்தக கடைகளிலும், டிவிடி கடைகளிலும் அப்படி ஒரு வெறி வருகிறது.பிடித்தவற்றை ஒட்டுமொத்தமாக மூட்டைகட்டிக் கொண்டு வந்தால் என்ன என்று.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

நான் தவறாமல் விரும்பி படிக்கும் எழுத்தாளர் பா.ராகவன் தளத்தில் புத்தக கண்காட்சிக்குச் செல்வோர்க்கு சில‌ அனுபவபூர்வமான குறிப்புகளை வழங்கியுள்ளார்.போகும் முன் அதை படித்துவிட்டு செல்வது நல்லது.சில அசெளரியங்களை தவிர்க்க இயலும்.

இது போக நான் அனுபவித்த‌ சில குட்டி குட்டி இம்சைகளையும் சொல்கிறேன்.

  • கூடுமானவரையில் கண்காட்சிக்கு முதல் நாள் செல்லாதீர்கள்.அநேக ஸ்டால்கள் பாதி திறந்த‌ ஷெல்ஃபுகளுடன் வரவேற்கும்.அப்போதுதான் ஷெல்ஃபுகளில் புத்தகங்களை பக்த சிரதையோடு அடுக்கி கொண்டிருப்பார்கள்.நீங்கள் “மோகமுள்” என்று போய் கேட்டால், ஸ்டாலில் இருப்பவர் பெயருக்குத் தேடிவிட்டு,உங்களை பார்த்து “சார், மோகமுள் எப்படி விட்டு போச்சுன்னு தெரில, மதியம் இல்ல நாளைக்கு வந்தீங்கன்னா நல்ல காப்பியாத் தரேன்” என்று அசடு வழிவார்.
  • கண்காட்சிக்கு சென்றவுடன் நீங்கள் செல்லும் முதல் பதிப்பகத்திலேயே விரும்பிய புத்தகத்தை வாங்காதீர்கள்.முதலில் எல்லா ஸ்டால்களில் உள்ள புத்தகங்க‌ளை ஒரு தடவையாவது பாருங்கள்.ஒரே புத்தகத்தின் விலை வெவ்வேறு பதிப்பகங்களில் வேறுபடும்.உதாரணமாக “மோகமுள்” நாவல் ஒன்றிற்கு மேற்பட்ட அச்சகங்கள் மறுபதிப்பு செய்கின்றன.ஆனால் விலை ஒரே போல் இருப்பதில்லை.உங்களுக்கு எது செளரியப்படுகிறதோ அந்த விலைக்கு வாங்குங்கள்.
  • Debit/Credit Cardஐ தேய்த்துக் கொள்ளலாம் என்று கனவு காணாதீர்கள்.”சார், கார்டுல ஏதோ Problemன்னு நினைக்கிறேன். Cash இருக்கா ?” என்பார்.Problem நமது கார்டில் இல்லை அவர்கள் மெஷினில்தான். ஒன்று, கார்டை தேய்க்கும் மெஷின் ஒழுங்காக நெட்வொர்க்கில் Connect செய்யப் பட்டிருக்க மாட்டாது; இல்லை, இந்த பாழாய்ப்போன Signal கிடைக்காது.பர்ஸில் பணத்தை தேவைக்கேற்ப்ப வைத்துக்கொள்வது உத்தமம்.
  • வாங்கிய புத்தகங்களை ஒரு முறையாவது சரி பாருங்கள்.எல்லா எழுத்துக்களும் தெளிவாக இருக்கின்றனவா,பக்க எண்கள் வரிசையாக இருக்கிறதா என்று.வீட்டில் வந்து ஒரு சிறுகதை அந்தரத்தில் தொங்குகிறது, அதன் முடிவு தெரியவில்லையே என்று புலம்பாதீர்கள்.

கடைசியாக சென்னையில் இருந்து கொண்டு கண்காட்சியைத் தவ‌ற விடாதீர்கள்.பெங்களூரில் இருந்து ஏக்க பெருமூச்சுடன் தவிக்கும் எங்களை போன்றவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

 
5 Comments

Posted by on December 30, 2010 in 2011, Book Fair, Madras, Notice Board., Society

 

Tags: , , , ,

அமைதியைத் தேடி….

எனக்கும் ஆம்னி பஸ்களில் போடுகின்ற படத்திற்க்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான்.அந்த டிரைவர் புண்ணியவானுக்கு நான் வருகிறேன் என்று எப்படி தெரியுமோ தெரியாது,சொல்லி வைத்தாற் போல் கர்ண கொடுர படங்களைத்தான் போடுவார்.தியேட்டர் என்றாலாவது ஓடி வந்து விடலாம்,ஓடும் பஸ்ஸில் என்ன செய்வது? தூங்கவும் முடியாது,படம் முடியும் வரை பார்த்துதான் ஆக வேண்டும்.அப்படித்தான் சில மாதங்களுக்கு முன் திமிரு படத்தை ஆம்னி பஸ்ஸில் போட்டு தொலைத்து விட்டார்கள்.படம் முழுக்க‌ அத்தனை கேரக்டர்கள் வரிசை கட்டி கொண்டு வந்து ஹை டெசிபலில் க‌த்தி விட்டு போனார்கள்.படம் பார்த்த பின்னும் ” எடுறா வண்டிய“, “ஏலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று யாரோ காதுக்குள் கத்துவது போலே இருந்தது.

தென் மாவட்டங்களில் இதை விட கொடுரம், அநேக தனியார் பஸ்களில் நான்கு டிவிக்கள் இருக்கும், ஒரே பாடலை, நாலு நரிகள் சேர்ந்து உங்க‌ள் காதுக்குள் ஊளை இடுவது போலிருக்கும்.

போன வருடம் கோவில்பட்டி பஸ் ஸடாண்டு சாலையில் நடந்த வந்து கொண்டிருந்தபோது,ஒரு கல்யாண மண்டபத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பூப்புனித நீராட்டு போஸ்டரில், பகத் சிங்கின் படம் பொறிக்கப்பட்டிருந்த‌தை பார்த்து பதறிப் போனேன்.பகத்சிங்கிற்கும் பூப்புனித நீராட்டு விழாவிற்கும் என்ன சம்பந்தம்? தேசபக்தியின் உச்சகட்ட வெளிப்பாடு போலும். இன்னும் மோசம்,அந்த மண்டபம் வாயிலில் காது கிழிய கதறிக் கொண்டிருந்த சினிமா பாடல்(வாழ வைக்கும் காதலுக்கு ஜே….) கோவில்பட்டி எல்லை வரை கேட்டிருக்கும்.என்னால் அந்த சத்ததில் ஒரு சில நிமிடங்கள் கூட இருக்கமுடியவில்லை,இருந்தும் பக்கத்து கடைகளில் அதற்கு போட்டியாக FM ரேடியோக்கள் அலறிக் கொண்டிருந்தன.ஏன்,கல்யாணம்,சடங்கு போன்ற குடும்ப விழாக்களில் லவுட்ஸ்பீக்கர்களை கதற விடுகிறார்கள்? முதலில் இந்த சத்த‌திற்கு நடுவே அவர்க்ளால் எப்படி உறவினர் கூட பேசமுடிகிறது? பக்கத்து வீடுகளில் வசிப்போர்க்கு(வயதானவர்கள்,படிக்கும் குழந்தைகள்) அது எவ்வள்வு எரிச்சல் மிகுந்த செயலாக இருக்கும் என்று ஒரு அடிப்படை Common Sense கூட இல்லை?

இந்த கொடுமைகள் போதாது என்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் என்ற பேரில் தெருவுக்குத் தெரு,   குத்து பாடல்களை கதற விடுகிறார்கள். பிள்ளையாருக்கும் “Daddy Mummy வீட்டில் இல்லை தட‌போட யாரும் இல்லை” பாடலுக்கும் என்ன சம்பந்தம்? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தத்தம் தெருவில் உள்ள ஃபிகர்கள் முன் ஒரு வித Show Offஐ காட்டும் மனப்பான்மையே தெரிகிறது.

மேலே சொன்ன நிகழ்வுகளுக்கு பொதுவான ஒன்று சத்தம்.ஏன் இவ்வளவு சத்தம் நம் அன்றாட‌ வாழ்வில்?

வீடு,சாலைகள்,பேருந்துகள்,திருவிழாக்கள்,கல்யாண மண்டபங்கள்,சினிமா உட்பட ஒரு இடம் பாக்கி இல்லாமல் சத்தம் பேரிரைச்சலாக அலைந்து கொண்டிருக்கிறது.அதிலும் குறிப்பாக செல்போன்,FM ரேடியோக்கள் வந்தபின் மயான அமைதி பாலு மஹேந்திரா படங்களில் மட்டுமே காணக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எனக்குத்தான் வயதாகிவிட்டதா, இல்லை எல்லோரும் இதே போல சத்த‌ததை உணர்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.தினமும் ஒரு மணி நேரமாவது எந்த சத்தமும் இல்லாமல் பூரண அமைதியோடு இருக்க முடியாதா என்ற‌ ஏக்கம் வருகிறது.

என்னைக் கேட்டால் ஆபிஸில் உள்ள அமைதி கூட நம் வீடுகளில் இல்லை.தூங்கும் நேரம் தவிர மற்ற எந்த‌ நேரத்திலும் டிவி அல்லது செல்போன் அலறி கொண்டிருக்கிறது.சரி,அதிலாவது ஒரு மென்மை இருக்கிறதா? Reality Show என்ற பேரில்,பங்கேற்பாளர்கள் முதல் தொகுத்து வழங்குபவர்கள் வரை காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும் தொலைக்காட்சியை அணைக்க மறுக்கிறார்கள். போட்ட படத்தயே போடுறான் பாவி….என்று புலம்பிகொண்டு பார்த்ததையே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறோம்.கடுப்பாக இருக்கிறது.இதனால்தான் என்னவோ இப்போதெல்லாம் கரன்ட் போனால் சலிப்பிற்கு பதில் ஒரு வித நிம்மதி உணர்வு வருகிறது.இனி வரும் காலத்தில், அமைதி என்பது வார்த்தையோடு மட்டும் போய்விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 
6 Comments

Posted by on January 31, 2010 in Society

 

Tags: , , , ,

தேநீர் நாட்கள்.

நண்பர் ஒருவர் பன்னாட்டு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்காக பெங்களூர் வந்த போது அப்படியே என்னைப் பார்ப்பதற்க்காக என் அறைக்கு வந்தார்.அவர் எனக்கு கல்லூரியில் ஒரு வருடம் சீனியர், இருந்தாலும் எனக்கு நல்ல பழக்கம்.பரஸ்பரம் ந‌ல‌ விசாரிப்புக‌ளுக்குப்பின் டீக‌டைக்குச் சென்றோம்.நண்பர் குழப்பத்துடன் “என்ன நண்பா டீ கடைன்னு பேக்கெரிக்கு கூட்டிட்டு வந்திருக்கஎன்றார். “பெங்களூர்ல டீ கடை,பேக்கெரி எல்லாம் ஒன்னுதான் ” என்றதும் நண்பர் மேலும் குழம்பிப் போய்” சரி, டீகடைன்னு சொல்ற,பாய்லர காணோம்? ” என்றார்.மச்சான், ”  பெங்களூர்ல பாய்லர் வச்ச டீ கடை கிடையாது, ஒரு Flask’ல டீ மாதிரி ஒன்னு இருக்கும் அதத்தான் போனா போகுதுன்னு நமக்கு ஊத்தி கொடுப்பான்,இல்லை உங்களுக்கு பாய்லர் உள்ள டீகடைல தான் குடிக்கணும்னா,ஓசுர் தான் போகணும் என்றேன்.நண்பர் அந்த பேக்கெரி கடைகாரரை ” இதெல்லாம் ஒரு டீ கடை,இதுக்கு ஒரு ஓனர் ” என்ற ரீதியில் பார்வையால் சபித்துவிட்டு வாடிய முகத்துடன் அந்த So-called ‘டி’யை வாங்கி (பெருமாள் கோயில் தீர்த்தம் போல்) குடித்தார்.(நண்பர்,நேர்முகத் தேர்வில் தோற்றிருந்தால் கூட இவ்வளவு வருத்தபட்டிருக்கமாட்டார் போலும்)

ந‌ண்ப‌ரின் ம‌னநிலையை என்னால் முழுவ‌துமாக‌ புரிந்துகொள்ள‌ முடிந்த‌து‌, நானும் பெங்களூர் வ‌ந்த‌ போது இத்த‌கைய‌ க‌லாசார‌ மாற்ற‌த்தை(?) க‌ண்டு பல நாட்கள் புரியாம‌ல் த‌வித்திருக்கிறேன்.ஏன்,முதன் முதலில் பெங்களூர் வரும் அநேக த‌மிழ‌ர்க‌ளுக்கும் இதே மனநிலைதான் இருந்திருக்கும் என்று ந‌ண்ப‌ர் பேக்கெரி கடைகாரரை பார்த்த விதத்தில் தெளிவாகத் தெரிந்த‌து.
ந‌ம் மூளையில் டீகடை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு Prototype உள்ளது.அதன் முதல் ரூல் பாய்லர்,அது இல்லாத டீகடையில் தேவாமிர்தமே குடித்தாலும் நமக்கு அது டீயாக தெரிவதில்லை.என்ன தான் வீட்டில் நெஸ்க‌ஃபே இருந்தாலும் பலர் தங்கள் நண்பர்களுடன் கடைகளில் டீ அருந்துவதை மிகவும் விரும்பத்தான் செய்கின்றனர்.குறிப்பாக கல்லூரி பருவத்திலிருந்து டீ கடை காதல் வளரத் தொடங்குகிறது.(அதை வளர்ப்பதில் தம் அடிப்போரின் பங்கு கணிசமானது.)ஒவ்வொரு நட்பு வட்டாரத்திலும் தம் அடிக்கும் நண்பனுக்குத் துணையாக தம் அடிக்காதோர் கூட்டமும் செல்கிறது.இங்கு எனக்கு இரண்டு விஷயங்கள் இன்றும் புலப்படவில்லை

1.தம் அடிக்கும் போது ஏன் டீ குடிக்கிறார்கள் ?

2.சரி,தம் அடிப்போர் தனியாகவும் செல்வதில்லை,துணைக்கு ஒருவனை கண்டிப்பாக அழைத்துச் செல்கிறார்கள்.(பெரும்பாலும் அந்தத் துணை தம் அடிப்பதில்லை.இதில் வேடிக்கை என்ன வென்றால் அந்தத் துணை ஒவ்வொரு தம் அடிக்கும் நண்பனோடும் தனித் தனியே டீ கடைக்குச் சென்று அது குடித்த டீக்களின் எண்ணிக்கை அவர்களின் ‘தம்’களின் எண்ணிக்கயைவிட அதிகம்.)

‌கல்லூரி முடிந்து சில வருடங்களுக்குப் பிறகு இரு நண்பர்கள் யதச்சேயாக சாலையில் சந்தித்தாலும் இரண்டொரு வார்த்தைகளுக்குப் பிறகு விழுகிற வார்த்தை ” வாடா மச்சான் ஒரு ‘டீ’ய போட்டுட்டே பேசுவோம் “.நமக்குத் தெரியாமலே டீகடைகள் நம் வாழ்வோடு பிணைத்துவிட்டன.எத்த‌னை டீ கடைக‌ள் வந்தாலும் கூட்ட‌திற்கு குறைவில்லை.என‌க்கும் டீ க‌டைக‌ளுக்குமான‌ நெருக்கும் சென்னையில் ஏற்ப‌ட்ட‌து.க‌ல்லூரி கால‌த்தில் ப‌ஸ் ஸ்டாண்டு டீ க‌டைக‌ளில் நின்று ஸ்கூட்டியில் போகும் பெண்க‌ளை ரசித்துக்‌ கொண்டிருந்த‌ நான், டீ கடைகளை ர‌சிக்க‌ ஆர‌ம்பித்த‌து திருவ‌ல்லிக்கேணியில்தான்.வேலை தேடி கொண்டிருந்த சமயம் மொத்த மேன்ஷனும் காலியாகவிட நான் மட்டும் தனித்துவிடபட்டிருப்பேன். விகடன்,குமுதம்,குங்குமம்,வண்ணத்திரையிலிருந்து ஹிண்டு வரை படித்து கிழித்த பின்பும் ஒரு நாளைக்கு நாற்ப்பத்தியெட்டு மணி நேரம் இருப்பது போல தோன்றும்.சரி, ஒரு கால் மணி நேரத்தையாவது விரட்டலாமே என்று கண்ட நேரத்தில் டீ கடைகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன்.காலை 5.30 மணி டீ கடைகள் திறப்பதில் ஆரம்பித்து இரவு 10.30 மணிக்கு கடைகள் மூடும் வரையில் எல்லா நேரங்களிலும் வித விதமாக டீ,லைட் டீ,1/2,காபி,மசாலா பால்,ராகி மால்ட் குடித்த அனுபவம் உண்டு.வேலை வெட்டி இல்லாததால் டீ கடையில் நடக்கும் சம்பவங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.அவை மிகவும் சுவாரஸ்யமானவை.

014

எல்லா டீ கடைகளிலும் முன்று கதாபாத்திரங்கள் கட்டாயம் உண்டு.கல்லாவில் நாயர்,(சட்டை போடாத) டீ மாஸ்டர்,பக்கத்து கடைகள் மற்றும் மேன்ஷன்களுக்கு டீ எடுத்துச் செல்லும் ஒரு சிறுவன். காலை 7 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரை வியாபாரம் ப‌டு அமர்க்க‌ள‌மாக‌ இருக்கும்.பொதுவாக‌ க‌ட்டிட‌ வேலைக்குச் செல்ப‌வ‌ர்க‌ள் காலைச் சிற்றுண்டி டீ க‌டைக‌ளில்தான்.ஒரு ப‌ன் அல்ல‌து இர‌ண்டு பொறைக‌ள்,டீயுட‌ன் முடித்து கொள்வார்க‌ள்.ஒரு கூட்டமாகத்தான் வருவார்கள்.(இதே கூட்டத்தில் ஒரு பெண் 11.30 மணி அளவில் தூக்கு ஒன்றில் டீ கேட்டு வருவாள்)அதன் பிறகு நடைபயிற்சி சென்று திரும்பியவர்கள்,மேன்ஷன்வாசிகள்,கழுத்தில் தாலி,வாயில் ‘தம்’ மற்றும் கையில் தேநீர் கிளாஸுடனும் இருக்கும் மென்பொருள் ஆசாமிகள்.

கீழ்கண்ட மூன்று விஷயங்கள் எல்லா டீ கடைகளுக்கும் பொதுவானவை:

1.முன் பின் தெரியாத எவரும் உரிமையோடு மாஸ்டர் ஒரு லைட் டீ, 2 காபி,மாஸ்டர் ஒரு 1/2 டீ,மாஸ்டர் 6 டீ அதில ஒன்னு சக்கர கம்மி என்று சொல்லும் விதம் எனக்கு ஆச்சரியமாகவும்,சந்தோஷமாகவும் இருந்தது.

2.பல சமயம் 15 கிளாஸ்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்,பக்கத்து கடைகளில் குடுப்பதற்க்கு.டீ மாஸ்டர் எடுக்கும் பாலின் அளவு மிகச் சரியாக 15 கிளாஸ்களை நிரப்பும்.அவர் டீ ஆத்தும் விதம் ம‌ற்றும் வேகம் எல்லாமே ரசிப்புக்குரியவை.

3.டீ கடையில் வேலை பார்ப்போர் பெரும்பாலும் வெளியில் சாப்பிட மாட்டார்கள்,கடையின் உள்ள‌யே ஒரு பானையில் சாதம் வைத்து சாப்பிடுவார்கள்.

மாலை வேளைகளில் திருவல்லிகேணி டீ கடைகளுக்கு முன்னால் பெரிய இருப்புச்சட்டியில் மசாலா பால் கொதித்துக்கொண்டிருக்கும்.இதற்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.

இப்படி பட்ட‌ நினைவுகளை சுமந்து வந்த எனக்கு பெங்களூர் டீ கடைகளின் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை…….

 
10 Comments

Posted by on October 19, 2009 in Madras, Society, Tea Kadai, Triplicane

 

Stupidity.

I was bit surprised when i found a fork and spoon in my plate along with poori.Not only this, i find many folks wrestling with rava dosa by using spoons.Just coz of this,i think of-late most of the servers are placing the spoons in plates before u ask.Eating with hands or spoon doesn’t matter, its one’s own choice.But there’s a basic criteria what all the foods are meant for spoons and what all for hands.Struggling with rava dosa or poori by using spoon is utter stupidity.Why we use spoons, jus coz some foods aren’t comfortable with hands,but when the spoon itself becoming a burden then why the hell we need to use?

 
Leave a comment

Posted by on June 20, 2009 in Society

 

Tags: