RSS

காதலிக்க நேரமில்லை – இயக்குனர் ஸ்ரீதர் – சில அசைபோடல்கள்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் தங்கள் இளமைக்கால‌ அடையாளமாக சில குறிப்பிட்ட படங்கள் நெருக்கமாக இருக்கும்.தங்களை, அந்தப் ப‌டத்தின் ஹீரோவோடு அடையாளப்படுத்தி ஒரு கற்பனை உலகில் பறக்க‌, தங்களின் (ஒரு தலை) காதலை, காதலியின் நினைவை திரும்பத் தூண்டுகிற அல்லது கல்லூரி காலத்தின் Nostalgia’விற்காக‌ என்று, சில படங்கள் Cult அந்தஸ்தை அடைந்திருக்கும்.அடுத்த தலைமுறைக்கு அந்தப் படங்கள் அபத்தமாககூடத் தோன்றலாம்.

மனைவியிடம் சண்டையிட்ட‌ பிறகு அல்லது பழைய நண்பனை, பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்தபோது அல்லது ஏதோ ஒரு மனச்சிக்கலுக்கு ஆறுதலாக அந்தப் படத்திடம் சரணடைவோம்.

  • என் தலைமுறைக்கு – காதலுக்கு மரியாதை, விண்ணைத்தாண்டி வருவாய், 7G Rainbow Colony.
  • முந்தைய தலைமுறைக்கு  – கிளிஞ்சல்கள்,ஒரு தலை ராகம்,பன்னீர் புஷ்பங்கள்.
  • அது போல அன்றைய தலைமுறைக்கு காதலிக்க நேரமில்லை.

sridhar

சிறு வயதில், இந்தப் படத்தை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் பலரின் முகம் பிரகாசமடைந்து பின் நிகழ்காலத்திற்கு வரும்போது ஒரு பெருமூச்சு வருவதை பார்த்திருக்கிறேன்.இன்று போல், கேபிள்,இணையம் இல்லாத நாட்கள்.இருந்தும், நண்பர்களுக்குள் வாயாலேயே முழுப்படத்தையும் ஓட்டுவார்கள் – இப்ப ஒரு பய எடுக்கிறானா காதலிக்க நேரமில்லை மாறி ? படத்தை பார்க்காமலேயே  எனக்கு அதன்மீது ஈர்ப்பு வந்தது இப்படித்தான்.அதன்பின் ஒரு முழுப்பரிட்சை விடுமுறையில் காதலிக்க நேரமில்லை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பிடித்தது பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாத 9-10 வயது. இருந்தும், ஆர்வம் காரணமாக முழுப் படத்தையும் பார்த்தேன்.

முதன்முறையாக‌ ஸ்ரீதர் எனும் கலைஞன்மேல் பிரமிப்பு  வந்தது கல்லூரி காலத்தில் – நெஞ்சில் ஓர் ஆலயம் பார்த்தபோது.அந்தப் படம் மிகவும் பாதித்தது.Melodrama’க்கள் உழன்று கொண்டிருந்த அக்காலத்தில், ஒரு மெலிதான காதல் கதை இனிய ஆச்சர்யம்.பல நாள் தேவிகா பித்துப்பிடித்து அலைந்தேன்.கதையைத்தாண்டி, அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட‌ படங்களில், நெஞ்சில் ஓர் ஆலயம் முக்கியமானது.மேலோட்டமாக காதல் கதையாய் இருந்தாலும் மூன்று கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் சிக்கல்களை,உறவுகளை முதிர்ச்சியோடு சொல்லியிருப்பார் ஸ்ரீதர்.

இப்படத்தை சத்யஜித் ரேயின் Charulataவோடு ஒப்பிடலாம் – இரண்டிலுமே மூன்றே பிரதான கதாபாத்திரங்கள், அதில் வீடு இதில் மருத்துவமனை கதைக்களன்.இரண்டு படங்களும்,முன்று பேர்களுக்குள் நடக்கும்  மனப்போராட்டங்களை விவரிப்பவை.இதில் ஒரு சுவாரஸ்யம் – சாருலதா வருவதற்கு முன்னமே நெஞ்சில் ஓர் ஆலயம் வந்துவிட்டது.ஆனால், சாருலதா, சினிமா மொழியை நேர்த்தியாக காட்சியமைப்பில், ஒளிப்பதிவில் பயன்படுத்தியது. நெஞ்சில் ஓர் ஆலயம், அந்தளவிற்கு காட்சியமைப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாற்று முயற்சியாய் தங்கிவிட்டது.

இந்தப் பதிவை எழுதத்தூண்டியது காதலிக்க நேரமில்லை – ஐம்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு – ஆனால் ஸ்ரீதர் எனும் கலைஞனை நெஞ்சில் ஓர் ஆலயம் வழியாகத்தான் எப்போதுமே பார்க்கத் தோன்றுகிறது.அதன் விளைவாகவே சில பத்திகள் எழுதினேன்.

ஸ்ரீதர், வழக்கத்திலிருந்து மாற்றாக ஏதோ ஒன்றை அன்று படங்களில் முயன்றிருக்கிறார்.Studio’க்குள் நந்தவன செட் போட்டு தேமேயென்று ஆடிக்கொண்டிருந்த சினிமாவில், காஷ்மீர் நதிக்கரையோரம் ஜெமினியும், வைஜெயந்திமாலாவும் குதிரையில் சாவதானமாக டுயட் பாட வைத்தது,நாடகபாணி வசனத்தை யதார்த்த பாணியில் மாற்றியது ஸ்ரீதர்தான்.

நெஞ்சம் மறப்பதில்லை – முன் ஜென்ம த்ரில்லர்;கிட்டதட்ட Epic போல் எடுக்கப்பட்ட சிவந்தமண்;போலிஸ்காரன் மகள், சுமைதாங்கி- குடும்ப டிராமாக்கள்;தேன் நிலவு,காதலிக்க நேரமில்லை,ஊட்டி வரை உறவு – Romantic Comedy;நெஞ்சில் ஓர் ஆலயம்,இளமை ஊஞ்சலாடுகிறது – முக்கோண காதல் கதை;உரிமைக்குரல் – ஜனரஞ்சக மசாலா என பல தளங்களில் இறங்கி அடித்திருக்கிறார்.ஆனால், அதில் சிலது மட்டுமே காதலிக்க நேரமில்லை போல காலம் கடந்தும் அதன் தனித்துவத்தை இழக்காமல் இருக்கின்றன.

காதலிக்க நேரமில்லை, ஒளிப்பதிவில்-வசனத்தில்-இசையமைப்பில், இளமையான ந‌டிகர்களில்: காஞ்சனா-ரவிச்சந்திரன்-ராஜஸ்ரீ என‌ பல விஷயங்களில் அது வரையிருந்த தடாக்களை தாண்டியது. படத்தின் பெயரே அன்று சர்ச்சைக்குரிய விஷயம்தான்.50 வருடங்களுக்கு முன் காதல் என்ற வார்த்தையே ஆபாசம்,பாவம் என்ற நம் வீடுகளில் நம்பியபோது காதலிக்க நேரமில்லை என்ற படத்தலைப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக என் நண்பர் ஒருவர் சொல்வார்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது வின்சென்டின் ஒளிப்பதிவு.அனுபவம் புதுமை பாடலைப் போல் அற்புதமான Lighting கொண்ட‌ பாடல்கள் அன்று வெகு அரிது.

இரவு நேரம். காதலனும் காதலியும் தனிமையில் ஒருவரை ஒருவர் எண்ணி பாடுவதாக சூழல்.பாடல் ஆரம்பமாவதைப் பாருங்கள்.சூழலுக்கேற்ப‌ மிதமான விளக்கு ஒளி;விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் சன்னமான பேஸ் கிடாரில் பாடல் துவங்க,சுவற்றில் நாயகியின் நிழல் ஆடுகிறது;பின்னர்தான் நாயகி நமக்கு அறிமுக‌மாகிறாள்.இரவு நேரத்தை எத்தனை கவித்துவத்தோடு கேமராவில் கொண்டு வந்திருக்கிறார் வின்சென்ட்.

இதே போல என்ன பார்வை உந்தன் பார்வை பாடலும்.பாடலின் ஆரம்பத்தில் பகற்நேரத்திற்கேற்ப என்ன அற்புதமான Lighting; முத்துராமன் Medium Close-Up’இல் தெரிய‌,தொலைவில் காஞ்சனா ஆடிக்கொண்டே வர கேமரா நகரும் கோணம் ஆகட்டும், பாடலை படமாக்குவதில் காலத்தை மீறின படைப்பு காதலிக்க நேரமில்லை.

நாகேஷ் அறிமுக காட்சியில், காஞ்சனா சொல்வார் – We don’t see Tamil Pictures;only English pictures. இதுதான் அன்றைய மேல்தட்டு இளைஞர்களின் எண்ணமாக இருந்தது.இளைஞர்களுக்கென்று பிரத்யேக படங்கள் தமிழில் கிடையாது.மிஸ்ஸியம்மா ஒன்று நினைவிற்கு வருகிறது மற்ற எல்லாம் அழுது வடியும் குடும்பச் சித்திரங்கள்,இல்லை சரித்திரப் படங்கள்.ஆனால், காதலிக்க நேரமில்லை, வணிக படங்களின் இலக்கணத்திற்குள் இருந்தே ஒரு வெறி கொண்ட பாய்ச்சலில், முற்றிலும் வேறான சினிமாவை முன்னிறுத்தியது.

Advertisements
 
Leave a comment

Posted by on March 12, 2014 in Cinema, Classic, Old Tamil Songs

 

Annayum Rasoolum

கேரளா கஃபே படத்தில் அந்த Proposal காட்சி மிகவும் பிடிக்கும். அப்போது, அவர்தான் ஃபாஹித் ஃபாசில் என்று எனக்குத் தெரியாது.என் கண்கள் எல்லாம் ரீமா கல்லிங்கல் மீதுதான்.அலுவல் காரியமாக திலகன் வீட்டிற்கு வருவார்;பேத்தியான ரீமா கல்லிங்கல் கதவை திறக்க, சில விநாடிகளுக்குள்,சில பார்வை-பேச்சு பரிமாற்றங்ககளுக்குப் பிறகு அந்த அழகான Proposal நடக்கும்.

அதன் பிறகு நான் மலையாளப் படங்கள் பார்க்கவில்லை.கடந்த ஒரு வருடமாக ஃபாஹித் ஃபாசிலுக்கு இணையம் எங்கும் பலத்த ஆராதனை நடந்த கொண்டிருக்க எனக்கு அவ்வப்போது ஆவல் எழும் அப்படி என்ன விஷேசம் அவரின் படங்களில் என்று !!! இருந்தும் சமயம் கூடவில்லை.

நேற்று ஒரு உத்வேகம், என்ன ஆனாலும் இன்று ஃபாஹித் ஃபாசிலின் படம் ஒன்றை பார்த்தே தீர வேண்டும் என்று.வீட்டு பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்றேன் ஆமேனை வேண்டி.என் நேரம் ஆமேன் இல்லை.சரி, சேத்தா at least அன்னையும் ரசுலும் இருக்கா என்று கேட்டு அதை வாங்கி வந்தேன்.

மதிய சாப்பாடுக்குப் பிறகு குழந்தையும்,மனைவியும் பக்கத்து அறையில் தூங்க, அந்த அழகான, அபூர்வ-அமைதி தருணத்தில் அன்னையும் ரசுலும் படத்தை பார்க்க ஆயுத்தமானேன். DVD’ஐ போடும் போதே அப்படி ஒரு பெருமிதம்,களிப்பு ஒரு உன்னத அனுபவத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல போகிறார்கள் என்று.

மொத்தக் கதையும் ஃபாஹித் ஃபாசிலின் நண்பன் Narration’இல் நடக்கிறது.அவனுக்கு கப்பலில் வேலை.ஒரு லீவிற்கு கொச்சின் வருகிறான்.அப்போது நடக்கும் அந்த மொத்த சம்பவங்களுமே படம்.

(Warning: Spoilers Ahead)

Image

படம் ஆரம்பமானது! இரண்டு போலிஸ்காரர்கள், ஃபைலில் சில கோப்புகளை எடுத்துக் கொண்டு ஒரு விட்டிற்கு வந்து கதவைத் தட்டுகிறார்கள்.கதவு திறக்க, ஃபாஹித் ஃபாசில் வருகிறார்!! எம்பெருமானை கண்டது போல் ஒரு மகிழ்ச்சி!! கொஞ்ச கொஞ்சமாக படம் மெதுவாக நகர ஆரம்பித்தது.

ஃபாசில் படத்தில் கார் ஓட்டுனராக‌ வருகிறார்;இஸ்லாமியர். ஆன்ட்ரியாவிற்கு, விண்ணைத்தாண்டி வருவாயா, தலைவி திரிஷா போல் conservative கிருஸ்த்துவப் பெண் கதாபாத்திரம்;ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறாள். ஆன்ட்ரியாவை பார்த்ததும் காதல் கொள்கிறார்.தினசரி, படகில் அவரை காலையிலும் மாலையிலும் பின் தொடர்ந்து காதலிக்க முயற்சி எடுக்கிறார்.ஆன்ட்ரியா,முதலில் மறுத்து பின் ஒப்புக் கொள்கிறார்.

வழக்கம் போல் காதலில் பிரச்சனை வருகிறது!! மதம் !!! ஃபாசில் மதம் மாற மறுக்கிறார்.இதற்கிடையில், ஆன்ட்ரியா வீட்டில் வேறொவரோடு நிச்சய‌ம் – As Usual, அவர் ஏற்கனவே கல்யாணமானவர் – நடக்க, இருவரும் தலைமறைவாகிறார்கள் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க!!

அப்பாடா படம் முடிந்தது என்று நினைக்க!!

ஒரு Twist!!! ஃபாஹித் ஃபாசிலை போலிஸ் கைது செய்கிறது.அவரின் நண்பன் (அவனும் இஸ்லாமியர்) பணத்திற்காக ஒரு கொலை செய்திருப்பான்.(அவனை போலிஸ் என்கவுன்டர் செய்துவிடும்) சோதனைக்கு, அவனை அந்த இடத்திற்கு கூட்டிச் சென்று திரும்ப அழைத்து வந்தது ஃபாசில்.அதனால் அவனும் கைதாகிறான்.

இதற்கிடையில் ஆன்ட்ரியாவை அந்த மணமான நபருக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.கோர்ட்டுக்குப் போகும் வழியில் ஃபாசில் தப்பி ஆன்ட்ரியா வீட்டிற்கு வருகிறான்.As Expected, அங்கு அவள் பிணமாக கிடக்கிறாள்!!

அப்பாடா படம் முடிந்தது என்று நினைக்க!!

Epilogue :

கப்பல் நண்பன் மறுபடி கொச்சின் வருகிறான்.தன் நண்பர்களைப் பற்றி விசாரிக்கிறான். கொலையுண்ட நண்பனின் மனைவி குடும்ப பாரத்தை சுமக்க அவள் வேலைக்கு செல்வதாக அறிகிறான்.

Colin என்ற இன்னொரு நண்பன் UK’வில் செட்டில் ஆகிவிடுகிறான்.

ஃபாஹித் ஃபாசில் ?

மும்பை துறைமுக வேலையில் சேர்ந்து, Electric Train’இல் செல்ல

அப்பாடா!!! படம் உண்மையிலேயே முடிந்தது!!!!

ஃபாஹித் ஃபாசில் – ஆன்ட்ரியா காதல் மூலக்கதை என்றால் கிளைக்கதைகள் :

ஃபாஹித் ஃபாசிலின் அண்ணன் பாஸ்போர்ட்டுக்கு எத்தனை பிரயத்தனப்பட்டும் போலிஸ் தராது.(முதல் காட்சி அது தான் – Passport Verification) காரணம் ? அவர்மீது Juvenile வழக்கு ஒன்று இருந்திருக்கும்.அதைக் காரணம் காட்டியே போலிஸ் பாஸ்போர்ட் தருவதற்கு இழுத்தடிக்கும்.இது சம்பந்தப்பட்ட காட்சிகள் அவ்வப்போது வந்து போகும்.

ஃபாஹித் ஃபாசிலின் நண்பர்கள் பணத்திற்காக கார் திருடுவது,மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபடுவது,பின் உச்சமாக கொலையில் போய் முடிவது என சில காட்சிகள்.

கப்பல் நண்பன், ஒருத்தியை, கல்லூரியில் படிக்கும்போது காதலித்திருப்பான்.ஆனால், அவளோ இன்னொருவனை நம்பி மோசம் போய்விடுவாள்.வெறுத்து, சர்ச்சுக்குச் சென்று, மத சம்பந்தப்பட்ட அலுவல்களை செய்யப் போய்விடுவாள்!!

படம் நெடுக Cliche’க்கள். Eg. சர்ச் திருவிழாவில்,ஆன்ட்ரியா மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்;மெழுகு வெளிச்சத்தில் அவளைப் பார்த்து ஃபாஹித் ஃபாசில் உறைந்து போகிறான்!!

ஆன்ட்ரியா கதாபாத்திரம் மிக குழப்பானது.படம் முழுக்க ஒரே மாதிரி முகத்தை வைத்துக் கொள்வது,எதற்குமே ஒரு Reaction காட்டாமல் இருப்பது விந்தை.படு சுமாரான நடிப்பு!!

இயக்குனர் என்ன சொல்லியிருக்கிறார் படத்தில் ஃபாஹித் ஃபாசில் – ஆன்ட்ரியா காதலையா ? அல்லது இந்தச் சமூகம் இஸ்லாமியர்களை எப்படி Corner செய்கிறது என்றா ? பின்னணி இசை,லொக்கேஷன்கள் கொஞ்சம் படத்தை பார்க்க வைக்கிறது!!

நீண்ட 2.45 மணி நேரத்திற்கு பிறகு ஆயாசமே மிஞ்சியது!!!

ஃபாஹித் ஃபாசிலின் முதல் படம் இப்படி ஒரு அனுபவத்தை தரும் என்று நான் நினைக்கவில்லை.

சீக்கிரம் ஆமேன்னை தரிசிக்க வேண்டும்!!!

 
Leave a comment

Posted by on December 2, 2013 in Malayalam_Cinema

 

பிஸ்கட் கனவுகள்!!!

பள்ளியில் படிக்கும் அரை டவுசர் காலங்களில், ஒவ்வொரு மாதமும், முதல் வாரத்தை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் எங்கள் வீட்டு ஓனர் வருகைக்காக! என் அப்பாவிடம் வாடகைப் பணம் வாங்க வருவார்.ஆனால், எனக்கு, என்ன வாடகை, ஒவ்வொரு மாதமும் என் அப்பா சரியாக வாடகை கொடுத்துவிடுவாரா என்பதை பற்றியெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது,தெரிந்துகொள்ள விருப்பமுமில்லை.என் கவனம் எல்லாம் வீட்டுக்காரர் ஒவ்வொரு மாதமும் எனக்காக கொண்டுவரும் Milk Bikis.

இதை வெறும் சம்பிராதய சடங்காக இருந்தால் ஒரிரு மாதங்களில் அவர் நிறுத்தியிருக்கலாம்.ஆனால் எனக்குத் தெரிந்து எல்லா மாதத்திலும் தவறாமல் வாங்கி வந்திருக்கிறார்.இன்று நினைத்தால் நெகிழ்வாக இருக்கிறது, ஒரு வீட்டுக்காரர், ஒரு பொடியனை மதித்து மாதா மாதம் பிஸ்கட் வாங்கி வர வேண்டும் என்ன கட்டாயம் ?

80’களில், Milk Bikis, சிறுவர்களுக்கு ஒரளவுக்கு எளிதாக‌ கிடைக்ககூடிய பண்டம்.பெரும்பாலான விருந்தினர்கள் குழந்தைகளுக்கு அது அல்லது Marie வாங்கி கொண்டு வருவார். மாரி பிஸ்கட்டை கண்ணில்கூட காணக்கூடாதென நினைப்பேன்.அதன் மேல் அப்படி ஒரு வெறுப்பு. Milk Bikis பரவாயில்லை ரகம்.Good Day Or Cream Biscuits – Luxury.

வெகு அரிதாகத்தான் யாராவது ஒரு நண்பர் True Elaichi Cream/Good Day வாங்கி வருவார்.அன்றைய தினத்தில் பம்பர் குலுக்கலில் Prize அடித்தவன்கூட அப்படி ஒரு தெனாவட்டில்,உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்திருக்க மாட்டான்.

என்ன எழவுக்கு இந்த சுயபுராணம் என்றால், இன்று சூப்பர் மார்கெட்டில் எத்தனை வகை பிஸ்கட்டுகள்,குக்கீகள், நொறுக்குதீனிகள். ஒவ்வொரு முறை பில் போடும் போது எனக்கு முன்னால் இருக்கும் நபர்களின் கூடைகளைப் பார்பேன். அரிசி,உப்பு,புளி வகையாராக்களை விட நொறுக்குதீனிகளே அதிகமிருக்கும்.எல்லாம் டஜன் டஜனாய் வாங்கி போவார்கள்.இதுக சாப்பாடே இது தான் போலும் என்று பல நேரம் வியந்திருக்கிறேன்.

Perk/5 Star
Oreo/Cookies/
Fanta/Mirinda/Coke
Lays/Bingo
Kinder Joy/

எனக்குத் தெரிந்து எந்தவொரு மத்தியதர சிறுவனும் இன்று நொறுக்குதீனிக்காக பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.வருடத்தின் எல்லா நாட்களும் வீட்டின் அடுக்களையில், குளிர் சாதன் பெட்டியில் ஒரு சிறிய பெட்டிகடையே இருக்கும்.படிக்கும் போதும்,டிவி பார்க்கும் போது பசிக்கிறதோ இல்லையோ,பிடிக்கிறதோ இல்லையோ தின்னு தீர்க்க வேண்டும் என்பது நீதி.தின்று தீர்க்கிறார்கள்.

மேலும், வாரம் ஒரு புதிய பிஸ்கட் சந்தைக்கு வருகிறது ஆனால் சுவையில் ஒரு புண்ணாக்கும் இல்லை.வெறும் Wrapper’களை கவர்ச்சியாக போட்டு,உள்ளே பிஸ்கட்டுகளை இன்னும் ஒர் சிறிய தாள்களில் போட்டு ஒரு Status சரக்காக விற்கிறார்கள்.அதை சந்தைபடுத்த Katrina Kaif ஒரு வாயில் Cream ஒழுக‌ உதட்டை நக்குகிறார்.பிஸ்கட் விளம்பரமா காண்டம் விளம்பரமா என்று சந்தேகமாய் இருக்கிறது.பிஸ்கட் எப்படி திங்கறதுன்னு கூட இந்த விளம்பரகார பயகதான் சொல்லிக் கேட்கணும் போல.

திடிரென்று பிரபஞ்ச வெடிப்பு போல் ஒரு Big Explosion!!! எல்லாமே அளவுக்கதிமாய் போய்விட்டது.திகட்ட திகட்ட நொறுக்குதீனிகள்,திகட்ட திகட்ட தொலைக்காட்சி சானல்கள்,வருஷம் 365 நாளும் கிரிக்கெட் விளையாடுறான்,ஊர்ல உள்ள எல்லா தியேட்டர்லயும் ஒரே படம், பிடிக்குதோ இல்லையோ அதத்தான் நாமும் பாத்து தொலயுணும், தெருவுக்கு பத்து ஹோட்டல்,மூணு மாசத்தக்கு ஒரு புது மொபைல் மாடல்,ஒரு ஐபோன் மாடல் எல்லாமே abundant. இதுவா வாழ்க்கை ? சத்தியமா எனக்கு தெரியல!!

அந்த 5 ரூபாய் க்கு Milk Bikis ஒவ்வொரு மாதம் காத்திருக்கும் நாட்களில் இருந்த ஏக்கம்,சந்தோஷம் இன்று இல்லை.எனக்கென்னமோ இதுதான் இரண்டாம் உலகம் போல் தெரிகிறது.

 

Tags:

சந்தோஷ் நாராயணன்.

அதிக இரைச்சில்லாத, வெறும் மெல்லிய‌ கிடாரின் அசைவுகள் கொண்ட,”ஆசை ஒர் புல்வெளி” பாடல், எனக்கு இத்தனை பிடித்தமான‌ பாடலாக அமையும் என நினைக்கவில்லை.கடந்த சில நாட்களாக இந்த பாடலைக் கேட்கவே இணையத்திற்கு வருகிறேன்.மற்ற எந்த இளம் இசையமைப்பாளரையும்விட‌  சந்தோஷ் நாராயணனின் இசை என் மனதிற்கு நெருக்கமாகப் படுகிறது.கேட்டதும் எளிதாக Relate செய்யக்கூடியதாக இருக்கிறது.வழக்கமான Synthesizer/Rap அலறல்கள் மத்தியில்  ஏதோ ஒரு புதிய இசையை, புதிய ஒலியை கேட்பது போல் உணர்கிறேன்.குறிப்பாக, பின்னணி இசையில், யுவ‌னிற்குப் பிறகு, என்னை பெரிதும் ஈர்த்தது சந்தோஷ் நாராயணன்தான்.அட்டகத்தி,சூது கவ்வும்  படங்களைவிட இவரின் பின்னணி இசை மிகவும் பிடித்திருந்தது.

நாயகனும் நாயகியும் Bar’ருக்குச் செல்கிறார்கள்.அங்கு திடிரென நாயகனுக்கும் இன்னொருத்தனுக்கும் கைகலப்பு ஏற்பட நாயகன் அவனை பாட்டிலால் அடித்தவிட மொத்த பாருக்குள் சச்சரவு,அடிதடி. படு லோக்கலான இப்படி ஒரு காட்சியில் அந்த‌ சூழலுக்கு துளியும் சம்பந்தமில்லாமல், Trumpet ஒலிக்க சுத்தமான Jazz பின்னணி(யில்) இசை இருந்ததை மிகவும் ரசித்தேன்.படத்தின் அட்டகாசமான‌ டைட்டில் இசை;பின்னணி இசையாக வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு Genre’இல், வழக்கமான பல்லவி இரண்டு சரண Formatக்குள் அடங்காதது என பல ஆச்சர்யங்கள்.;இவர் பின்னணி இசையில்  கிடாரை பயன்படுத்தும்விதம் என்னமோ பழைய கெளபாய் படங்களில் வரும் எனியோ மோரிகோனின் Flamenco Guitar Style’ஐ நினைவுபடுத்தியது.

 
2 Comments

Posted by on November 16, 2013 in Background Score, Cinema, Music.

 
Aside

தமிழ் சினிமா இசைக்கும் தற்போது கடுமையான Recession போல.கேட்கிற பல பாடல்கள் கடைந்தெடுத்த மகா குப்பை.கடந்த சில‌ வருடங்களில், மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தாலே, ஒரு நாலைந்து தான் தேறும் போல‌.மீதி இருக்கும் ஏனைய குப்பைகள், மியுசிக் சானல்கள்,பண்பலை வாயிலாக – குழந்தைக்கு வலுக்கட்டாயமாக மருந்து புகட்டுவது போல், திரும்ப திரும்ப நம் காதுகளில் செலுத்தப்பட்டு  விடாப்படியாக Hit ஆக்கப்படுகிறது.

இதைவிட கவலை தரும் விஷயம் பாடல் வரிகளில் உள்ள தரம்- Lack of Lyrical Clarity/Quality.பாடல்களின் தரம் தாழ்ந்து போனதற்கு முக்கிய காரணம்- தடி எடுத்தவன் எல்லா தண்டல்காரன் என்பது போல், நடிகர்கள்,இயக்குனர்கள் என்று பலரும் சகட்டுமேனிக்கு பாட்டு எழுதுவது.இதனால், பாடல் வரிகள் ட்யுனோடு சேர்ந்து பயணிக்காமல் தனியாய்த் துருத்திக்கொண்டு தெரிகிறது.இன்னும் குறிப்பாகச் சொன்னால், வார்த்தைகள் ட்யுனிற்கு அடங்க மறுக்கின்றன.ஹிந்தி பாடல்களை தமிழில் டப் செய்து கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.இதற்கு நல்ல உதாரணம் :

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல.

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..

மேற்கண்ட இடங்களில் பாடல் வரிகள் ட்யுனோடு அடங்க சிரமப்பட்டு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

விளைவு : பாடல் வசன-நடையாக விடுகிறது

இன்னொரு பிரச்ச‌னை அர்த்தமில்லா Dummy வரிகள்.இயக்குனர்களும் இதை பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. பாடல் வரிகள் வெறும் ட்யுனை நெறப்பும்  Fillerக‌ள் என நினைத்துக் கொண்டார்களா ? மனம் போன போக்கில் வார்த்தைகளை போட்டு நெறப்புகிறார்கள்.ஆரம்ப வரிகள் Catchyயாக இருக்க வேண்டும்,பாடலினுள் எந்த புண்ணாக்கும் இருந்துவிட்டு போகட்டும்.

எவன்டி உன்னப் பெத்தான் பாட்டின் சரணத்தில் வரும் வரிகள் போதும், இன்றைய‌ தமிழ் சினிமா இசையின் மகத்துவத்தை புரிந்து கொள்ள…

Un Paste Brush’um Naanthan
Un Šhøwer Gel’um Naanthan
Un Maanam Kaakura Maelaada Naanthan
Un Lip Gløss’um Naanthan
Un Èye Liner Naanthan
Un Azhaga Køøtura Makeup’ae Naanthan
Un Teddybear Naanthan
Un Bed & Pilløw Naanthan
Un Veetøda Night Watchman Naanthan
Un Nagamum Šathaiyum Naanthan

அது என்ன, உன் Un Paste Brush’um நாந்தான் / Un Šhøwer Gel’um நாந்தான்? இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்?

யார் கேட்டார்கள் இவர்கள் பாட்டு எழுதித் தொலைக்க  வேண்டுமென்று ?

*******

நம் இயக்குனர்களுக்கு, பாடல்களின் முக்கியத்துவம்/தேவை பற்றி ஒரு தெளிவில்லையா ? அல்லது மெனக்கெட விருப்பமில்லையா ? இவர்கள் அனைவரும் பாலசந்தர் படங்களைத் திரும்ப ஒரு முறை பார்க்க வேண்டும்.தமிழ் சினிமாவில், பாலசந்தரைப் போல வேறு எவரும் பாடல்களை உருப்படியாக கையாண்டதில்லை. சிந்து பைரவியில் – பாடறியேன் என்ற பாட்டைத் நீக்கி விட்டால் போதும், அந்த படமே அர்த்தமிழந்துவிடும். ஆனால் இன்று படத்தின் சில காட்சிகளை நீக்கினாலே எந்த பாதிப்பும் இல்லை என்ற ரீதியில் படங்கள் வருகிறது.

காட்சிகளில்/வசனங்களில் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை பாடல்களால்/பின்னணி இசையால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

இதற்கு  நல்ல உதாரணங்கள் சொல்ல வேண்டுமென்றால் :

  • பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே…
  • நானொரு சிந்து காவடிச் சிந்து…
  • கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
  • சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ்…
  • நீ ஆண்டவனா தாய் தந்தைதான்…
  • பூங்காத்து திரும்புமா எம்பாட்ட விரும்புமா…

இந்த பாடல்களில் சொல்லியதை வசனத்தால்,காட்சியமைப்புகளால் சொல்ல முடியுமா ?

பாடல்கள் கதையை நகர்த்த,அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல‌ இயக்குனருக்கு பெரிதும் உதவுகின்றன.இதை ஏன் இன்றைய இயக்குனர்கள் புரிந்து கொள்ளவில்லை ? பாடல்களை வெறும் Crowd-Pulling பண்டமாக பார்க்கின்றனர் ?

*******

கடந்த பத்து ஆண்டுகளில் எனக்குப் பிடித்த ஒரே பாடல் என்றால் அது:

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

என்ன வரிகள்!!! வைரமுத்து நீர் 100 ஆண்டு வாழவேண்டும் அய்யா..

தேவை அவசர சிகிச்சை – தமிழ் சினிமா இசை.

 
Leave a comment

Posted by on February 5, 2013 in Cinema, K Balachandar, Music.