RSS

Monthly Archives: January 2010

அமைதியைத் தேடி….

எனக்கும் ஆம்னி பஸ்களில் போடுகின்ற படத்திற்க்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான்.அந்த டிரைவர் புண்ணியவானுக்கு நான் வருகிறேன் என்று எப்படி தெரியுமோ தெரியாது,சொல்லி வைத்தாற் போல் கர்ண கொடுர படங்களைத்தான் போடுவார்.தியேட்டர் என்றாலாவது ஓடி வந்து விடலாம்,ஓடும் பஸ்ஸில் என்ன செய்வது? தூங்கவும் முடியாது,படம் முடியும் வரை பார்த்துதான் ஆக வேண்டும்.அப்படித்தான் சில மாதங்களுக்கு முன் திமிரு படத்தை ஆம்னி பஸ்ஸில் போட்டு தொலைத்து விட்டார்கள்.படம் முழுக்க‌ அத்தனை கேரக்டர்கள் வரிசை கட்டி கொண்டு வந்து ஹை டெசிபலில் க‌த்தி விட்டு போனார்கள்.படம் பார்த்த பின்னும் ” எடுறா வண்டிய“, “ஏலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று யாரோ காதுக்குள் கத்துவது போலே இருந்தது.

தென் மாவட்டங்களில் இதை விட கொடுரம், அநேக தனியார் பஸ்களில் நான்கு டிவிக்கள் இருக்கும், ஒரே பாடலை, நாலு நரிகள் சேர்ந்து உங்க‌ள் காதுக்குள் ஊளை இடுவது போலிருக்கும்.

போன வருடம் கோவில்பட்டி பஸ் ஸடாண்டு சாலையில் நடந்த வந்து கொண்டிருந்தபோது,ஒரு கல்யாண மண்டபத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பூப்புனித நீராட்டு போஸ்டரில், பகத் சிங்கின் படம் பொறிக்கப்பட்டிருந்த‌தை பார்த்து பதறிப் போனேன்.பகத்சிங்கிற்கும் பூப்புனித நீராட்டு விழாவிற்கும் என்ன சம்பந்தம்? தேசபக்தியின் உச்சகட்ட வெளிப்பாடு போலும். இன்னும் மோசம்,அந்த மண்டபம் வாயிலில் காது கிழிய கதறிக் கொண்டிருந்த சினிமா பாடல்(வாழ வைக்கும் காதலுக்கு ஜே….) கோவில்பட்டி எல்லை வரை கேட்டிருக்கும்.என்னால் அந்த சத்ததில் ஒரு சில நிமிடங்கள் கூட இருக்கமுடியவில்லை,இருந்தும் பக்கத்து கடைகளில் அதற்கு போட்டியாக FM ரேடியோக்கள் அலறிக் கொண்டிருந்தன.ஏன்,கல்யாணம்,சடங்கு போன்ற குடும்ப விழாக்களில் லவுட்ஸ்பீக்கர்களை கதற விடுகிறார்கள்? முதலில் இந்த சத்த‌திற்கு நடுவே அவர்க்ளால் எப்படி உறவினர் கூட பேசமுடிகிறது? பக்கத்து வீடுகளில் வசிப்போர்க்கு(வயதானவர்கள்,படிக்கும் குழந்தைகள்) அது எவ்வள்வு எரிச்சல் மிகுந்த செயலாக இருக்கும் என்று ஒரு அடிப்படை Common Sense கூட இல்லை?

இந்த கொடுமைகள் போதாது என்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் என்ற பேரில் தெருவுக்குத் தெரு,   குத்து பாடல்களை கதற விடுகிறார்கள். பிள்ளையாருக்கும் “Daddy Mummy வீட்டில் இல்லை தட‌போட யாரும் இல்லை” பாடலுக்கும் என்ன சம்பந்தம்? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தத்தம் தெருவில் உள்ள ஃபிகர்கள் முன் ஒரு வித Show Offஐ காட்டும் மனப்பான்மையே தெரிகிறது.

மேலே சொன்ன நிகழ்வுகளுக்கு பொதுவான ஒன்று சத்தம்.ஏன் இவ்வளவு சத்தம் நம் அன்றாட‌ வாழ்வில்?

வீடு,சாலைகள்,பேருந்துகள்,திருவிழாக்கள்,கல்யாண மண்டபங்கள்,சினிமா உட்பட ஒரு இடம் பாக்கி இல்லாமல் சத்தம் பேரிரைச்சலாக அலைந்து கொண்டிருக்கிறது.அதிலும் குறிப்பாக செல்போன்,FM ரேடியோக்கள் வந்தபின் மயான அமைதி பாலு மஹேந்திரா படங்களில் மட்டுமே காணக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எனக்குத்தான் வயதாகிவிட்டதா, இல்லை எல்லோரும் இதே போல சத்த‌ததை உணர்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.தினமும் ஒரு மணி நேரமாவது எந்த சத்தமும் இல்லாமல் பூரண அமைதியோடு இருக்க முடியாதா என்ற‌ ஏக்கம் வருகிறது.

என்னைக் கேட்டால் ஆபிஸில் உள்ள அமைதி கூட நம் வீடுகளில் இல்லை.தூங்கும் நேரம் தவிர மற்ற எந்த‌ நேரத்திலும் டிவி அல்லது செல்போன் அலறி கொண்டிருக்கிறது.சரி,அதிலாவது ஒரு மென்மை இருக்கிறதா? Reality Show என்ற பேரில்,பங்கேற்பாளர்கள் முதல் தொகுத்து வழங்குபவர்கள் வரை காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும் தொலைக்காட்சியை அணைக்க மறுக்கிறார்கள். போட்ட படத்தயே போடுறான் பாவி….என்று புலம்பிகொண்டு பார்த்ததையே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறோம்.கடுப்பாக இருக்கிறது.இதனால்தான் என்னவோ இப்போதெல்லாம் கரன்ட் போனால் சலிப்பிற்கு பதில் ஒரு வித நிம்மதி உணர்வு வருகிறது.இனி வரும் காலத்தில், அமைதி என்பது வார்த்தையோடு மட்டும் போய்விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 
6 Comments

Posted by on January 31, 2010 in Society

 

Tags: , , , ,