RSS

Monthly Archives: February 2011

Triplicane to Elec.City.

போன மார்க‌ழியோடு பெங்களூர் வந்து நாலு வருடம் ஒடிவிட்டது. நடிகைகள் பாணியில் உளறினால் “Actualla நா Bangalore வருவேன்னு கொஞ்சங்கூட‌ எதிர்பாக்கல,It was just an accident.” உண்மை.அப்படித்தான் நடந்தது.வேலை தேடி நொந்து போய் வெறுப்பின் உச்ச கட்டத்தில் இருந்த சமயம், நண்பன் ஒருவனின் திடிர் Ref. உதவியால் ஒரே வாரத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு தூக்கி எறியப்பட்டேன்.

இப்போது நினைத்தாலும் எல்லாம் கனவு போல் உள்ளது.டிகிரி முடித்த கையோடு சென்னை பயணம். நண்பர்களோடு கூடாரமிட்டது திருவல்லிக்கேணி மேன்ஷனில்.எங்கள் வகுப்பிலேயே வேலை தேடி சென்னைக்கு வந்த முதல் பெருமை எங்கள் குழுவையே சாரும்.அதே போல் கடைசியாக வேலை கிடைத்த பெருமையும் எங்களையே சாரும்.வேலை இல்லையென்ற ஒரே கவலையைத் தவிர வேறு கவலை எதுவும் இல்லை.வாழ்க்கை நன்றாகத்தான் கழிந்து கொண்டிருந்தது.

திருவல்லிக்கேணி மேன்ஷன் தினங்கள் மறக்க முடியாதவை.எனக்கு மட்டுமல்ல வேலை தேடி அங்கு வந்த எந்த ஒரு இளைஞனுக்கும் அப்படித்தான்.சென்னையில் எந்த ஒரு இடத்திலும் இல்லாத நெருக்கத்தை திருவல்லிக்கேணியில் உணரலாம்.(கட்டடங்களின் நெருக்கத்தை சொல்லவில்லை)

மிர்ச்சி சுச்சியின் “ஹலோ சென்னை”யுடன் எல்லா நாளும் விடியும்.பிறகு ஆடி அசைந்து டீகடைக்குச் சென்று வ‌ழக்கமான புலம்பல்களுடன் (என்னலே Freshers’அ ஒரு பய கூப்ட மாட்றான் ?) டீ/காபியை குடித்து கொண்டிருப்போம்.இதற்கிடையில் எதாவது பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் கண்டிப்பாக டீகடைக்கு வருவான் கழுத்தில் கம்பெனி தாலியோடு.அவனை, எங்களைப் போன்ற சிலர் ஏக்கத்தோடும்/வயித்தெரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருப்போம்.”டீகடைல என்ன கம்பெனி Tag வேண்டிக் கிடக்கு,ஆஃபிஸ்க்குள்ளே போய் Tag’அ போட்டா என்ன. எனக்கு மட்டும் வேலை கிடைக்கட்டும், ங்கொயால கக்கூஸ்ல கூட Tag’அ கழட்ட மாட்டேன்” என்று முணுமுணுப்பான் நண்பன்.

பின் மறுபடி மேன்ஷன் வந்து சிறிது நேரம் ஹிந்துவை மேய்ந்தால் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் நேர்காணலுக்கு வரவும் என்று வக்கணை வளிக்கும்.அத்தி பூத்தாற் போல் என்றாவது Freshers’க்கு வேலை வாய்ப்பு விளம்பரம் வரும்.ஆனால் 10,12,டிகிரி என‌ ஒவ்வொன்றிலும் 70% கேட்பார்கள்.எனக்கும்,என் நண்பர்களுக்கும் மொத்தமாக கூட்டி பார்த்தாலே 70% வராது இதில் 10,12 என்று தனி தனியாய் பார்த்தால் கேட்கவே வேண்டாம்.

சரி,சாஃப்ட்வேரில்தானே இந்த மதிப்பெண் பிரச்சனை என்று BPOக்களுக்கு சில காலம் படை எடுத்தோம்.BPOக்களின் சிறப்பம்சமே எத்தனை தடவை தேர்வில் தோற்றாலும் மறுபடி மறுபடி வரலாம்.அதோடு வருடம் முழுவதும் வேலை வாய்ப்புகள் இருக்கும்.சாந்தோமில், ஒரு பன்னாட்டு BPO இருந்தது.எப்பொழுதெல்லாம் மேன்ஷனில் பொழுது போகவில்லையோ இல்லை கரண்ட் கட் ஆனாலோ உடனே அங்கு தேர்விற்கு கிளம்பிவிடுவோம்.அடிக்கடி அங்கு தேர்விற்கு சென்றதன் விளைவு கேள்வித்தாள் குடுக்கும் முன்னரே, பதில்களை தாளில் டிக் செய்யும் திறமை பெற்றிருந்தோம்.போதாதற்கு தேர்விற்கு வந்த அனைவருக்கும் காபியும் பிஸ்கட்டும் தந்தார்கள்.ஒரு எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டு நேர்காணல் ரவுண்ட்.ஒவ்வொரு தடவையும் இர‌ண்டாவது ரவுண்டில் வெளியனுப்பிவிடுவார்கள்.ஒரே ஒரு தடவை அதிசயமாக கடைசி ரவுண்டில் நுழைந்தேன்.ஆனால் ஒரே கேள்வியில் அந்த கனவும் பொய்த்துப்போனது.எதற்காக MCA படித்துவிட்டு BPO பக்கம் வருகிறாய் என்று தேர்வாளர் கேட்க ஒரு வித பதட்டத்தில் BPOக்களில் சேர்ந்தால் Englishஐ நன்றாக improve செய்து கொள்ளலாம் என்று சொன்னேன்.Englishஐ Improve செய்தபின்தான் இங்கு வரவேண்டும்,இங்கு வந்து Improve செய்ய இது என்ன Vivekananda Institutea? என்று கேட்டதன் விளைவு BPO சகாப்தம் முடிந்துபோனது.

To Be Contd….

 
7 Comments

Posted by on February 25, 2011 in Bangalore., Elec.City, Madras, Personal, Triplicane

 

சில நல்ல ஆங்கில புத்தகக் கடைகள்.

MG-Road – Brigade Roadகளில் என்னை மிகவும் கவர்வது அழகான சேட்டுப் பெண்களைவிட அங்கு உள்ள புத்தக கடைகளே.புத்தகங்களை வாங்குகிறேனோ இல்லையோ புத்தக கடைகளில் வரிசையாக,துறை வாரியாக புத்தகங்கள் அடுக்கப் பட்டிரும் அழகை ரசிப்பதற்காகவே ஒவ்வொரு வார சனி ஞாயிறுகளில் அங்கு “கற்றது தமிழ்” பிரபாகர் போல தனியாக‌ அலைவது வழக்கம்.

Bangalore Central அருகே இருக்கும் Crossword Book Shop‘ல் ஒரு அரை மணி நேர சுற்றல்.ஒவ்வொரு ஷெல்ஃபிலும் உள்ள புத்தகங்களின் தலைப்புகளை மேய்ந்து,சில புத்தகங்களின் பக்கங்களை புரட்டி,பின் மாடிக்குச் சென்று ஏதாவது நல்ல ஹிந்தி படங்களின் டிவிடிகள் குறைந்த விலைக்கு இருக்கிறதா என்று பார்ப்பது,பின் மதிய உணவிற்காக பிருந்தாவன் ஹோட்டலுக்குள் புகுவது என் சம்பிராதய காலை நேர‌ அட்டவணை.

Post-Lunch ஹிகின்பாத்தம்ஸ்.எப்போது சென்றாலும் வழக்கமான எரிச்சலூட்டும் தலைப்புகள்.சாண்டில்யனின் “கடல் புறா “,கல்கியின் “பார்த்திபன் கனவு”,சோழர் வரலாறு,ஓஷோ புத்தகங்கள்,வாழ்வில் முன்னேறுவது எப்படி,30 நாளில் கன்னடம்,பருத்தி வீரன் திரைக்கதை,IPS ஆவது எப்படி,மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ,செட்டிநாட்டு சமையல்.இதையும் மீறி நீங்கள் ஏதேனும் இலக்கிய புத்தகத்தை கேட்டால்,தமிழ்ப் பிரிவில் வேலை செய்யும் நபர்,அவரின் வழக்கமான பதிலை வைத்திருப்பார்.பெரிய லிஸ்ட் கொடுத்திருக்கேன் சார்,Month-Endla வந்துரும்.அதுலே நீங்க சொன்னது இருக்கு.ஆனால், அது எந்த Month-End என்பது மடிவாலா அய்யப்பனுகே வெளிச்சம்.இருந்தும்,காவெரி நடுவர் மன்ற‌ தீர்ப்புக்கு காத்திருக்கும் தமிழனைப் போல ஒவ்வொரு வாரமும் நம்பிக்கையோடு சென்று ஏமாறுவது, இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.இனியும் நடக்கும்.

இப்படி போய் கொண்டிருந்த என் வார இறுதிகளில் ஒரு திடீர் மாற்றம்.இரண்டு அருமையான புத்தக கடைகளை போன வாரம் பார்க்க நேர்ந்தது.இரு நல்ல புத்தக கடைகளை கண்டு கொள்ள எனக்கு பெங்களூரில் நாலு வருடம் ஆனது.வெட்கக்கேடு!!

Blossom Book House இருக்கும் இடமே சுவாரஸ்யம்.Church சாலையின் இரு பக்கம் முழுதும் பரவியிருக்கும் பப்புகள்,இளம் ஜோடிகளின் குறும்புச் சிரிப்புகள்,கன்னத் தடவல்கள்,கால் சீண்டல்கள்,உரசும் பீர் கோப்பைகள்,லவுட்ஸ்பீக்க‌ர்களின் கதறல்கள் என்று அமெரிக்கனிஸத்தை பிரதிபலிக்கும் ஒரு இடத்தில் அமைதியாக ஒரு புத்தக கடை மூன்று தளங்களில் வீற்றிருப்பது எனக்கு புரியாத புதிராக உள்ளது.

Blossom‘ல், தரை தளம்,முதல் தளம்,இரண்டாம் தளம்,மூன்றாம் தளம் என ஒவ்வொரு தளத்திலும் Steel Rackகுகள் முழுக்க புத்தகங்கள்.புதிய புத்தகங்களோடு பழைய புத்தகங்களும் கிடைக்கிறது.குறுகலான படிகளில் ஏறி ஒவ்வொரு தளமாக புத்தகங்களை ரசிப்பது, இரு பக்கமும் Steel Rackகுகளில் புத்தகங்களுடன் ஊடே நாம் தனியாக நடந்து வருவது அலாதி இன்பம்.புதிய புத்தகங்களுக்கு 20% தள்ளுபடியும் பழைய புத்தகங்களுக்கு 50%-60% வரை தள்ளுபடி தருகிறார்கள்.

உதாரணமாக‌, Crossword”ல் ஸாலிங்கரின் “The Catcher in the Rye” நாவல் விலை 299,Blossom‘ல் 240.இதே நாவலை பழைய புத்தகமாக வாங்கினால் விலை 90தான். Classics,History,Music,Movies,Educational,Auto-Biography,Self-Improvement,Non-Fiction என்று சகல Genre’களிலும் புத்தகங்கள் இருக்கின்றன‌.இது தவிர National Geographic’ன் பழைய இதழ்கள் குவித்து வைத்திருக்கிறார்கள்.விலை 30Rs.நீங்கள் புத்தகத்தின் தலைப்பை மறந்தாலும் அங்குள்ள கணிப்பொறியில் Google Search செய்து தலைப்பை எடுத்து கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி.

Web Portal : http://www.blossombookhouse.com/

Address : #84/6, Opp to Amoeba, Church street(Off Brigade Road), Bangalore-560001

அடுத்தது Select Book Store.Brigade Road’ன் ஊடே குறுகலான ஒரு சாலையில், பூனை பதுங்கியது போல கண்ணுக்கு எளிதாக அகப்படாமல் இருக்கிறது.65 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த புத்தகக் கடை,இந்தியாவின் பழமையான புத்தகக் கடைகளில் ஒன்று.

கடையின் நிறுவனர் K.B.K Rao தேர்ந்த வாசிப்பாளர்.புத்தகங்களை வெறும் வியாபார நோக்கோடு அணுகாமல் உண்மையாக நேசிப்பவர்.அதனால் தான 65 ஆண்டுகளுக்கு மேலாக அவரால் இந்த புத்தகக் கடையை வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கிறது.கடையின் வெளித் தோற்றம் ஒரு சிறிய அறையயைப் போல இருந்தாலும் எங்குமே கிடைக்காத பல அரிய‌ புத்தகங்களுக்குகாக பலர் விரும்பி வருகின்றனர்.முழுக்க முழுக்க பழைய புத்தகங்கள் தான்.

விலையும் அதனால் மிகக் குறைவு.புத்தகத்தின் விலை எண்பது ரூபாய் என்று போட்டிருந்து,நீங்கள் எண்பது ரூபாயா!! என்று வாய் பிளந்து கேட்டால் உடனே கீழே இருக்கும் படத்திலிருப்பவர் எழுபது ரூபாய் என்பார்.மறுபடி எழுபது ரூபாயா!! என்று திருப்பிக் கேட்டால் அறுபது ரூபாய் என்பார்.இப்படியே புத்தகத்தின் விலையை எவ்வளவு குறைக்க வைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வைப்பது உங்கள் சாமர்த்தியம்!!

கடந்த வாரம், நான் முதன் முதலில் இக்கடைக்குச் சென்ற போது George Orwell‘ன் “Animal Farm” கண்ணில் பட்டது.அது 1972‘ல் யாரோ பம்பாய் நூலகத்தில் வாங்கியது.எங்கெங்கோ பலரிடம் கைமாறி இப்போதைக்கு என்னிடம் வந்திருக்கிறது.அதை பார்த்த போது ஒரு Nostalgic உணர்வு வந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை.அந்தக் கால பம்பாயை கற்பனை செய்ய தொடங்கிவிட்டது என் மனது.(இத்தனைக்கும் நான் பம்பாயை படங்களில் பார்த்த‌தோடு சரி) ஒரு வலியும் சந்தோஷமும் கலந்த உணர்வு சிறிது நேரம் இருந்தது.இத்தகைய உணர்வு Crossword போன்ற கடைகளில் கிடைக்குமா என்பது சந்தேகமே!!

Select Book Shop

No. 71, Brigade Road, Cross, Brigade Road
Bengaluru, Bengaluru, Karnataka 560001

Website : http://www.selectbooksindia.com/