RSS

Monthly Archives: April 2014

தமிழ் சினிமா பாடல்களின் அந்திமக்காலம்.

தமிழ் சினிமாவில், பாடல்களை கூர்ந்து கவனிப்பவர்கள் கடந்த 2-3 வருடங்களில் ஒரு பெரிய மாற்றத்தை அடைந்திருப்பதை உணர்ந்திருக்கலாம்.

முதலாவது: பாடல்களின் முக்கியத்துவம் வெகுவாக குறைந்திருக்கிறது. பெரிய ஹீரோக்கள் படங்களைத்தவிர அநேக படங்களில் சொற்ப பாடல்களே வருகின்றன‌. அதுவும் பின்னணியில் 2-3 நிமிடமே வரும் மான்டேஜ் பாடல்கள். இந்தப் பாடல்கள்கூட படத்தின் Promo’விற்காக‌, படத்தைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்புக்காக, முன்னமே Youtube’இல் வெளியிடப்படுகிறது. பாடல்களே இல்லாமல் படங்கள் வர ஆரம்பித்துவிட்டன‌. இது நல்லதா இல்லையா என்பதுற்குள் நாம் போக வேண்டாம்.

நான் சொல்ல வருவது, பத்து வருடம் முன்பு வரை படத்தின் பிரதான வணிகம் பாடல்களை நம்பியே இருந்தது.எத்தனை பெரிய மாஸ் ஹீரோவாக இருந்தாலும் சரி, அவரவர் படங்களில், பாடல்களை, ஹிட்டாக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். 80’களில் ராஜா என்றால் 90’களில் ரஹ்மான். இதற்கு உதாரணமாக, கல்லூரிக்காலத்தில் நான் கண்ட‌ ஒரு விளம்பரத்தைச் சொல்கிறேன்: இடைவேளையில், ரஹ்மான் இசையமைப்பில் வெளிவரயிருக்கும் சங்கமம் படத்தின் ட்ரெய்லரை கண்டு மகிழுங்கள்.

ரஹ்மான் இசையால் ஒரு படத்தின் ட்ரெய்லர்கூட பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது அன்று.

ஆனால், இன்று ?  கீழ்கண்ட படங்களைப் பார்த்தாலே புரியும் பாடல்களின்பிடி எப்படி தளர்ந்து போனதென்று

  • சூது கவ்வும்.
  • நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.
  • பீட்சா.
  • ஆரண்ய காண்டம்.
  • ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
  • உதயம்.
  • விஸ்வரூபம்.
  • மெரினா.
  • கோலி சோடா.
  • அட்டகத்தி.

ஒரு காலத்தில் பாடல்களுக்கிடையில் உரையாடல் வந்தன, பின் 10 பாடல்களாகாயின, பின் 5-6 என மாறி இன்று 2-3 நிமிடத்தில் வந்து நிற்கிறது. இந்த போக்கை கவனித்தாலே சமூகத்தின் வேகத்தை கண்டு கொள்ளலாம். ஆலாய்ப் பறக்கும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் யாருக்கும் பொறுமை இல்லை. ஆற அமர உட்கார்ந்து சாப்பிடும்/ரசிக்கும் காலம் போய் எல்லோருமே ஒரு பதட்ட மனநிலையில் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் முதல் Whatsapp வரை அனைத்திலும் ஒரு அவசரம்.Trailer’கூட இன்று Teaser ஆகிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முடிவை நேரடியாக தாவிப் பிடிக்க ஒரு வெறி.இந்த ரீதியில் பாடல்களின் இலக்கணம் மாறியதில் ஆச்சர்யமில்லை.

இரண்டாவது: பாடல்கள் அதன் முக்கியத்துவத்தை இழக்கும்போது தன்னியல்பாக இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் தங்களின் முக்கியத்துவத்தை இழக்க நேரிடுகிறது. இசையமைப்பாளர்க்கு பின்னணி இசையாவது இருக்கிறது பாடலாசிரியர்களுக்கு அதுவுமில்லை.வருங்காலத்தில், கவிதை புஸ்தகம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை. பாருங்கள், இன்று படத்திற்கு ஒரு புது இசையமைப்பாளர்,பாடலாசிரியர் அறிமுகமாகிறார்.

முன்பு போல், பாடல்களை ஹிட்டாக்கியேத் தீரவேண்டுமென என பெரிதான நெருக்கடி கிடையாது.படத்தை பப்ளிசிட்டி செய்ய ஒரு பாடல் பிரபல்யமாக வேண்டும். அவ்வளவே. அதற்கு துள்ளலலான இசையும், பாடலின் ஆரம்ப வரிகள் மிக எளிமையாகவும், முக்கியமாய், இளைஞர்களை கவர்வதாக இருக்க வேண்டும். இலக்கியம்,ஆழமிக்க கவித்துவ வரிகள் போன்ற புண்ணாக்குகளுக்கு இனி வரும் காலங்களில் இடமில்லை. விளைவு:தனுஷ், சிம்பு, செல்வராகவன், கானா பாலா எல்லாம் கவிஞர்களாகி விட்டனர்.

இன்று, சின்ன கண்ணன் அழைக்கிறான்,செளக்கியமா கண்ணே,அஞ்சலி அஞ்சலி,காற்றின் மொழி எல்லாம் செல்லுபடி ஆகாது.காசு பணம் துட்டு,Fy Fy Kalachify,வெரசா போகையிலே, ஜிங்குனமணி போன்ற வஸ்துக்கள்தான் விற்பனையாகும்.