RSS

Monthly Archives: March 2014

காதலிக்க நேரமில்லை – இயக்குனர் ஸ்ரீதர் – சில அசைபோடல்கள்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் தங்கள் இளமைக்கால‌ அடையாளமாக சில குறிப்பிட்ட படங்கள் நெருக்கமாக இருக்கும்.தங்களை, அந்தப் ப‌டத்தின் ஹீரோவோடு அடையாளப்படுத்தி ஒரு கற்பனை உலகில் பறக்க‌, தங்களின் (ஒரு தலை) காதலை, காதலியின் நினைவை திரும்பத் தூண்டுகிற அல்லது கல்லூரி காலத்தின் Nostalgia’விற்காக‌ என்று, சில படங்கள் Cult அந்தஸ்தை அடைந்திருக்கும்.அடுத்த தலைமுறைக்கு அந்தப் படங்கள் அபத்தமாககூடத் தோன்றலாம்.

மனைவியிடம் சண்டையிட்ட‌ பிறகு அல்லது பழைய நண்பனை, பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்தபோது அல்லது ஏதோ ஒரு மனச்சிக்கலுக்கு ஆறுதலாக அந்தப் படத்திடம் சரணடைவோம்.

  • என் தலைமுறைக்கு – காதலுக்கு மரியாதை, விண்ணைத்தாண்டி வருவாய், 7G Rainbow Colony.
  • முந்தைய தலைமுறைக்கு  – கிளிஞ்சல்கள்,ஒரு தலை ராகம்,பன்னீர் புஷ்பங்கள்.
  • அது போல அன்றைய தலைமுறைக்கு காதலிக்க நேரமில்லை.

sridhar

சிறு வயதில், இந்தப் படத்தை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் பலரின் முகம் பிரகாசமடைந்து பின் நிகழ்காலத்திற்கு வரும்போது ஒரு பெருமூச்சு வருவதை பார்த்திருக்கிறேன்.இன்று போல், கேபிள்,இணையம் இல்லாத நாட்கள்.இருந்தும், நண்பர்களுக்குள் வாயாலேயே முழுப்படத்தையும் ஓட்டுவார்கள் – இப்ப ஒரு பய எடுக்கிறானா காதலிக்க நேரமில்லை மாறி ? படத்தை பார்க்காமலேயே  எனக்கு அதன்மீது ஈர்ப்பு வந்தது இப்படித்தான்.அதன்பின் ஒரு முழுப்பரிட்சை விடுமுறையில் காதலிக்க நேரமில்லை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பிடித்தது பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாத 9-10 வயது. இருந்தும், ஆர்வம் காரணமாக முழுப் படத்தையும் பார்த்தேன்.

முதன்முறையாக‌ ஸ்ரீதர் எனும் கலைஞன்மேல் பிரமிப்பு  வந்தது கல்லூரி காலத்தில் – நெஞ்சில் ஓர் ஆலயம் பார்த்தபோது.அந்தப் படம் மிகவும் பாதித்தது.Melodrama’க்கள் உழன்று கொண்டிருந்த அக்காலத்தில், ஒரு மெலிதான காதல் கதை இனிய ஆச்சர்யம்.பல நாள் தேவிகா பித்துப்பிடித்து அலைந்தேன்.கதையைத்தாண்டி, அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட‌ படங்களில், நெஞ்சில் ஓர் ஆலயம் முக்கியமானது.மேலோட்டமாக காதல் கதையாய் இருந்தாலும் மூன்று கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் சிக்கல்களை,உறவுகளை முதிர்ச்சியோடு சொல்லியிருப்பார் ஸ்ரீதர்.

இப்படத்தை சத்யஜித் ரேயின் Charulataவோடு ஒப்பிடலாம் – இரண்டிலுமே மூன்றே பிரதான கதாபாத்திரங்கள், அதில் வீடு இதில் மருத்துவமனை கதைக்களன்.இரண்டு படங்களும்,முன்று பேர்களுக்குள் நடக்கும்  மனப்போராட்டங்களை விவரிப்பவை.இதில் ஒரு சுவாரஸ்யம் – சாருலதா வருவதற்கு முன்னமே நெஞ்சில் ஓர் ஆலயம் வந்துவிட்டது.ஆனால், சாருலதா, சினிமா மொழியை நேர்த்தியாக காட்சியமைப்பில், ஒளிப்பதிவில் பயன்படுத்தியது. நெஞ்சில் ஓர் ஆலயம், அந்தளவிற்கு காட்சியமைப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாற்று முயற்சியாய் தங்கிவிட்டது.

இந்தப் பதிவை எழுதத்தூண்டியது காதலிக்க நேரமில்லை – ஐம்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு – ஆனால் ஸ்ரீதர் எனும் கலைஞனை நெஞ்சில் ஓர் ஆலயம் வழியாகத்தான் எப்போதுமே பார்க்கத் தோன்றுகிறது.அதன் விளைவாகவே சில பத்திகள் எழுதினேன்.

ஸ்ரீதர், வழக்கத்திலிருந்து மாற்றாக ஏதோ ஒன்றை அன்று படங்களில் முயன்றிருக்கிறார்.Studio’க்குள் நந்தவன செட் போட்டு தேமேயென்று ஆடிக்கொண்டிருந்த சினிமாவில், காஷ்மீர் நதிக்கரையோரம் ஜெமினியும், வைஜெயந்திமாலாவும் குதிரையில் சாவதானமாக டுயட் பாட வைத்தது,நாடகபாணி வசனத்தை யதார்த்த பாணியில் மாற்றியது ஸ்ரீதர்தான்.

நெஞ்சம் மறப்பதில்லை – முன் ஜென்ம த்ரில்லர்;கிட்டதட்ட Epic போல் எடுக்கப்பட்ட சிவந்தமண்;போலிஸ்காரன் மகள், சுமைதாங்கி- குடும்ப டிராமாக்கள்;தேன் நிலவு,காதலிக்க நேரமில்லை,ஊட்டி வரை உறவு – Romantic Comedy;நெஞ்சில் ஓர் ஆலயம்,இளமை ஊஞ்சலாடுகிறது – முக்கோண காதல் கதை;உரிமைக்குரல் – ஜனரஞ்சக மசாலா என பல தளங்களில் இறங்கி அடித்திருக்கிறார்.ஆனால், அதில் சிலது மட்டுமே காதலிக்க நேரமில்லை போல காலம் கடந்தும் அதன் தனித்துவத்தை இழக்காமல் இருக்கின்றன.

காதலிக்க நேரமில்லை, ஒளிப்பதிவில்-வசனத்தில்-இசையமைப்பில், இளமையான ந‌டிகர்களில்: காஞ்சனா-ரவிச்சந்திரன்-ராஜஸ்ரீ என‌ பல விஷயங்களில் அது வரையிருந்த தடாக்களை தாண்டியது. படத்தின் பெயரே அன்று சர்ச்சைக்குரிய விஷயம்தான்.50 வருடங்களுக்கு முன் காதல் என்ற வார்த்தையே ஆபாசம்,பாவம் என்ற நம் வீடுகளில் நம்பியபோது காதலிக்க நேரமில்லை என்ற படத்தலைப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக என் நண்பர் ஒருவர் சொல்வார்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது வின்சென்டின் ஒளிப்பதிவு.அனுபவம் புதுமை பாடலைப் போல் அற்புதமான Lighting கொண்ட‌ பாடல்கள் அன்று வெகு அரிது.

இரவு நேரம். காதலனும் காதலியும் தனிமையில் ஒருவரை ஒருவர் எண்ணி பாடுவதாக சூழல்.பாடல் ஆரம்பமாவதைப் பாருங்கள்.சூழலுக்கேற்ப‌ மிதமான விளக்கு ஒளி;விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் சன்னமான பேஸ் கிடாரில் பாடல் துவங்க,சுவற்றில் நாயகியின் நிழல் ஆடுகிறது;பின்னர்தான் நாயகி நமக்கு அறிமுக‌மாகிறாள்.இரவு நேரத்தை எத்தனை கவித்துவத்தோடு கேமராவில் கொண்டு வந்திருக்கிறார் வின்சென்ட்.

இதே போல என்ன பார்வை உந்தன் பார்வை பாடலும்.பாடலின் ஆரம்பத்தில் பகற்நேரத்திற்கேற்ப என்ன அற்புதமான Lighting; முத்துராமன் Medium Close-Up’இல் தெரிய‌,தொலைவில் காஞ்சனா ஆடிக்கொண்டே வர கேமரா நகரும் கோணம் ஆகட்டும், பாடலை படமாக்குவதில் காலத்தை மீறின படைப்பு காதலிக்க நேரமில்லை.

நாகேஷ் அறிமுக காட்சியில், காஞ்சனா சொல்வார் – We don’t see Tamil Pictures;only English pictures. இதுதான் அன்றைய மேல்தட்டு இளைஞர்களின் எண்ணமாக இருந்தது.இளைஞர்களுக்கென்று பிரத்யேக படங்கள் தமிழில் கிடையாது.மிஸ்ஸியம்மா ஒன்று நினைவிற்கு வருகிறது மற்ற எல்லாம் அழுது வடியும் குடும்பச் சித்திரங்கள்,இல்லை சரித்திரப் படங்கள்.ஆனால், காதலிக்க நேரமில்லை, வணிக படங்களின் இலக்கணத்திற்குள் இருந்தே ஒரு வெறி கொண்ட பாய்ச்சலில், முற்றிலும் வேறான சினிமாவை முன்னிறுத்தியது.

 
Leave a comment

Posted by on March 12, 2014 in Cinema, Classic, Old Tamil Songs