RSS

Category Archives: National Award

தூசி தட்டியவை.

முதலில், இந்த வருடம் பதிவே எழுதக்கூடாதென நினைத்திருந்தேன்.ஆனால் உங்களின் போதாத நேரம்,அந்த யோசனை வந்த அடுத்த இரண்டு மாதங்களில் 8 பதிவுகள் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆனால் அதன் பிறகு ஒரு பெரிய இடைவெளி.(உங்களின் நல்ல நேரம்) கடந்த இரு மாதங்களில்,அவ்வப்போது பதிவெழுத ஆர்வம் ஏற்பட்டாலும் அதை சரிவர செயல்படுத்த முடியவில்லை.முதல் காரணம் வீட்டில் இணைய வசதி இல்லை.அடுத்து, வார இறுதியில் மேற்கொண்ட சொந்த ஊர் பயணங்கள்.இப்போது விஷயத்திற்கு வருவோம்.எழுதாத நாட்களில் அவ்வப்போது Draft’ல்  சேமித்து வைத்த சிலவற்றை கொஞ்ச கொஞ்சமாக வெளியிட திட்டம்.அவைதான் இந்த பதிவு:

*********

நல்ல கவிதையை ரசிக்க ஒரு பக்குவப்பட்ட மனநிலையும் பொறுமையும் தேவை.எப்போதும் கடைசி ரயிலைப் பிடிக்கும் மனநிலையில் இருக்கும் என்னைப் போன்ற அவசரகுடுக்கைகளுக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது.என்னுடைய கவிதை ரசனை வைரமுத்து,வாலி எழுதிய சினிமா பாடல்களோடு முடிந்துவிடும்.வார பத்திரிகைகளில் வரும் பல கவிதைகளை படித்தாலும் ஒன்றிரண்டுதான் புரியும்.புரியாதவற்றை  பிரயத்தனப்பட்டு புரிந்துகொள்ள எனக்கு விருப்பமுமில்லை பொறுமையுமில்லை.அந்த சமயங்களில்,நம் பேட்டையே சிறுகதை நாவல் என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்வதுண்டு.இருந்தாலும்,அபூர்வமாக சில கவிதை கவர்வதுண்டு.அப்படி ஒன்று இந்த மாத உயிர்மை இதழில் வந்தது.எழுதியவர் தேவதச்சன்.

நீ எனக்கு
எவ்வளவு முக்கியம் தெரியுமா
பாம்புக்கு

எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம்!

*********

வெற்றிமாறனுக்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.ஆடுகளம் தமிழில் ஒரு முக்கிய முயற்சி((எண்பதுகளில் நாயகன் வந்ததைப் போல).ஒரு காட்சியை எப்படி அணுக வேண்டும் என்பதை ஆடுகளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்;அந்தளவுக்கு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் அசாத்திய உழைப்பு தெரிந்தது.

இன்னும் சரியாகச் சொன்னால்:

சினிமாவில் திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் இயக்குனர் ஒரு காட்சியை எடுக்கும் விதம் அல்லது அணுகும் விதம்.எழுத்தில் சாதாரணமாய் தெரியும் காட்சிகள் கூட இயக்குனரின் அழகான Screen Presence’ஆல் பிரமாண்டமாக மாறுவதுண்டு.அந்த வகையில் ஆடுகளத்தோடு ஒப்பிட்டால், இந்த வருடத்தில் வேறு ஒரு படமும் அதன் பக்கத்தில் கூட நிற்கத் தகுதியில்லை.

பி.கு: ஒத்த சொல்லாலே நடனமைப்புகெல்லாம் விருது கிடைத்ததில் எனக்கு உடன்பாடில்லை,ஆனால் விருதில் ஒளிப்பதிவை கண்டுகொள்ளாதது வருத்தமே.