RSS

Category Archives: Book Fair

Chennai Book Fair – 2011

சில தனிப்பட்ட காரணங்களால் ஜனவரியில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத சூழ்நிலை.போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் முழுதாக படித்து முடிக்காமல் ஷெல்ஃப்களில் தூங்குகிறது.இருந்தாலும் மனம் அமைதியற்று அலைகிறது.எப்படியாவது Book Fairக்குச் சென்றுவிட முடியாதா என்று ஏங்குகிறது.சென்னையில் இருந்த‌போது வருடந்தவறாமல் புத்தக சந்தைக்குச் சென்றாலும், கையில் காசில்லாததால் ஒரு சில புத்தகங்களோடு வர வேண்டிய நிலை.இப்போது கூரையைப் பிய்த்து கொட்ட வில்லையென்றாலும், ஏதோ முடிந்தவரையில் விரும்பும் புத்தகங்களை வாங்கமுடிகிறது என்பதே மிகப்பெரிய சந்தோஷம்.புத்தக கடைகளிலும், டிவிடி கடைகளிலும் அப்படி ஒரு வெறி வருகிறது.பிடித்தவற்றை ஒட்டுமொத்தமாக மூட்டைகட்டிக் கொண்டு வந்தால் என்ன என்று.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

நான் தவறாமல் விரும்பி படிக்கும் எழுத்தாளர் பா.ராகவன் தளத்தில் புத்தக கண்காட்சிக்குச் செல்வோர்க்கு சில‌ அனுபவபூர்வமான குறிப்புகளை வழங்கியுள்ளார்.போகும் முன் அதை படித்துவிட்டு செல்வது நல்லது.சில அசெளரியங்களை தவிர்க்க இயலும்.

இது போக நான் அனுபவித்த‌ சில குட்டி குட்டி இம்சைகளையும் சொல்கிறேன்.

  • கூடுமானவரையில் கண்காட்சிக்கு முதல் நாள் செல்லாதீர்கள்.அநேக ஸ்டால்கள் பாதி திறந்த‌ ஷெல்ஃபுகளுடன் வரவேற்கும்.அப்போதுதான் ஷெல்ஃபுகளில் புத்தகங்களை பக்த சிரதையோடு அடுக்கி கொண்டிருப்பார்கள்.நீங்கள் “மோகமுள்” என்று போய் கேட்டால், ஸ்டாலில் இருப்பவர் பெயருக்குத் தேடிவிட்டு,உங்களை பார்த்து “சார், மோகமுள் எப்படி விட்டு போச்சுன்னு தெரில, மதியம் இல்ல நாளைக்கு வந்தீங்கன்னா நல்ல காப்பியாத் தரேன்” என்று அசடு வழிவார்.
  • கண்காட்சிக்கு சென்றவுடன் நீங்கள் செல்லும் முதல் பதிப்பகத்திலேயே விரும்பிய புத்தகத்தை வாங்காதீர்கள்.முதலில் எல்லா ஸ்டால்களில் உள்ள புத்தகங்க‌ளை ஒரு தடவையாவது பாருங்கள்.ஒரே புத்தகத்தின் விலை வெவ்வேறு பதிப்பகங்களில் வேறுபடும்.உதாரணமாக “மோகமுள்” நாவல் ஒன்றிற்கு மேற்பட்ட அச்சகங்கள் மறுபதிப்பு செய்கின்றன.ஆனால் விலை ஒரே போல் இருப்பதில்லை.உங்களுக்கு எது செளரியப்படுகிறதோ அந்த விலைக்கு வாங்குங்கள்.
  • Debit/Credit Cardஐ தேய்த்துக் கொள்ளலாம் என்று கனவு காணாதீர்கள்.”சார், கார்டுல ஏதோ Problemன்னு நினைக்கிறேன். Cash இருக்கா ?” என்பார்.Problem நமது கார்டில் இல்லை அவர்கள் மெஷினில்தான். ஒன்று, கார்டை தேய்க்கும் மெஷின் ஒழுங்காக நெட்வொர்க்கில் Connect செய்யப் பட்டிருக்க மாட்டாது; இல்லை, இந்த பாழாய்ப்போன Signal கிடைக்காது.பர்ஸில் பணத்தை தேவைக்கேற்ப்ப வைத்துக்கொள்வது உத்தமம்.
  • வாங்கிய புத்தகங்களை ஒரு முறையாவது சரி பாருங்கள்.எல்லா எழுத்துக்களும் தெளிவாக இருக்கின்றனவா,பக்க எண்கள் வரிசையாக இருக்கிறதா என்று.வீட்டில் வந்து ஒரு சிறுகதை அந்தரத்தில் தொங்குகிறது, அதன் முடிவு தெரியவில்லையே என்று புலம்பாதீர்கள்.

கடைசியாக சென்னையில் இருந்து கொண்டு கண்காட்சியைத் தவ‌ற விடாதீர்கள்.பெங்களூரில் இருந்து ஏக்க பெருமூச்சுடன் தவிக்கும் எங்களை போன்றவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

 
5 Comments

Posted by on December 30, 2010 in 2011, Book Fair, Madras, Notice Board., Society

 

Tags: , , , ,